நீதிபதி என்னிடம் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்று கேட்கவே இல்லை. நான் கர்ப்பமாக இருப்பதாக கூறிய சவுக்கு சங்கர் மீது வழக்கு தொடர்வேன் தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா தெரிவித்துள்ளார்.
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்காக முதல்வர் விஜய் கடந்த 4 ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது சாலை மறியல் போராட்டம் மற்றும் அதனைத்தொடர்ந்து காவல் நிலைய முற்றுகையில் ஈடுபட்டது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா, அவரது கணவர் முருக சந்திரகுமார், நிர்வாகிகள் இசை மதிவாணன், கந்தசாமி, சூர்யா, சஞ்சய் காந்தி, விக்னேஷ், ஷேக்பரித் உள்ளிட்ட 12 பேரை தாராபுரம் போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து, 12 பேரும் ஜாமீன் கோரி தாராபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி உமா மகேஸ்வரி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இந்தநிலையில், தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த கார்த்திகாவிடம், சவுக்கு சங்கர் நீங்கள் கர்ப்பமாக இருப்பதாக நீதிபதியிடம் கூறியதாக கூறியுள்ளாரே எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது “நீதிபதியிடம் கார்த்திகா மட்டும் 4 மணி நேரம் பேசினார். கார்த்திகா பேசி முடித்ததும் ரிமாண்ட் செய்ய உத்தரவிட்டார். அப்போது கார்த்திகா பிரக்னென்சியாக இருக்கிறேன் எனக் கூறினார். அதற்கு நீதிபதி அந்த காரணத்திற்காக எல்லாம் விட முடியாது என சிறையில் அடைக்க உத்தரவிட்டார் என சவுக்கு சங்கர் கூறினார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்” என நெறியாளர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த கார்த்திகா, “உண்மையில் இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் 6 மணி நேரம் நடந்தது. இரவு 9 மணிக்குச் சென்றோம், முடிய இரவு 3 மணிக்கு மேல் ஆனது. அப்போது என் தரப்பு வாதங்களை நான் கூறினேன். நாம் தமிழர் வழக்கறிஞர் நன்மாறன் அவர்கள், நீதிபதி கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் கூறுங்கள். நீங்களாக எதுவும் கூற வேண்டாம் என என்னிடம் ஏற்கனவே கூறியிருந்தார். எனவே சபை நாகரிகம் கருதி, கேட்ட கேள்விகளுக்கு மட்டுமே நான் பதில் அளித்தேன்.
சவுக்கு சங்கர் கூறுவது போல் எதுவும் இல்லை. சவுக்கு சங்கர் ஒரு நல்ல மனநல மருத்துவரை போய் பார்க்க வேண்டும் என நான் நினைக்கிறேன். இல்லை என்றால் யார் இது பற்றி அவரிடம் கூறினார்களோ, அவர்களை செக் பண்ண வேண்டும். நான் கடைசியில் கூறியது என்னவென்றால், இந்த காவல்துறை ஆய்வாளருக்கு எங்கள் மீது தனிப்பட்ட பழிவாங்கும் நோக்கம் உள்ளது. அதற்கு நீங்கள் வினையாற்ற வேண்டாம் என்று கூறினேன்.
இருப்பினும் எங்களை ரிமான்ட் செய்தார்கள். அப்போது இந்த வழக்குகளின் உத்தரவை தெரிந்துக் கொண்டேன் என கையொப்பம் இட வேண்டும். நாங்கள் 10 பேரும் கையெழுத்து போட்டு விட்டு தான் வந்தோம். நீதிபதி என்னிடம் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்று கேட்கவும் இல்லை. நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறவும் இல்லை. முதலில் நான் கர்ப்பமாகவே இல்லை. எனக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களே போதும்.
எனவே சவுக்கு சங்கருக்கு இந்த காதுக்கு பூ சுத்தற வேலை எல்லாம் வேண்டாம். என்னிடம் வேலையைக் காட்டினால் நான் வழக்கு தொடர்வேன். தற்போதைய விவகாரத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்கு தொடர்வதற்கான வேலையை நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர்கள் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.” இவ்வாறு கார்த்திகா பதிலளித்தார்.
