கலகலப்பான காதல் – காமெடி சரவெடியா?; ‘அன்பே டயானா’ விமர்சனம்!

ஜமா படம் மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் – நடிகர் பாரி இளவழகன் இந்த முறை அன்பே டயானா என்ற காதல் காமெடி நிறைந்த படம் மூலம் களம் இறங்கி இருக்கிறார். கலகலப்பான ஜனரஞ்சகமான குடும்பங்கள் கொண்டாடும் வகையில் காமெடி கலந்த காதல் படமாக இப்படத்தை உருவாக்கி இருக்கும் பாரி இளவழகன் அதை எந்த அளவு ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்? 

பெரம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் தன் தாய் ரோஜா மற்றும் தந்தை சேத்தனுடன் வசிக்கும் பாரி இளவழகன் சிறுவர்களுக்கு கோச்சாக இருந்து வருகிறார். இவர் சிறு வயது பள்ளியில் இருக்கும் முதலே ஆங்கிலோ இந்தியன் பெண்ணான நாயகி ரம்யாவை காதலித்து வருகிறார். மிகவும் ஜாதிப்பற்று கொண்டு இருக்கும் ரோஜா தன் சாதியில் மட்டுமே பெண் எடுக்க வேண்டும் என குறிக்கோளோடு வாழ்ந்து வருகிறார். அம்மாவுக்கு பயந்து வீட்டுக்கு அடங்கும் பிள்ளையாக இருக்கும் பாரி பயந்து பயந்து நாயகியை காதலிக்கிறார்.

ஒரு கட்டத்தில் நாயகியும் ஓகே சொல்லிவிட அந்த சமயத்தில் பாரிக்கு ரோஜா ஜோசியம் பார்க்க இரண்டு மாதத்தில் பாரிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என கூறி விடுகிறார். இதனால் ரோஜா தன் அண்ணன் மகளை பாரிக்கு திருமணம் செய்து வைக்க நிச்சயம் செய்து விடுகிறார். இந்தக் கட்டத்தில் பாரி – ரம்யா ஜோடி எப்படியாவது ரோஜாவை சமாதானம் செய்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முடிவெடுக்கின்றனர். இதன் பின்னர் பாரி மற்றும் ரம்யா காதல் கைகூடியதா, இல்லையா? இவர்கள் திருமணத்திற்கு தடையாக இருந்த ஜாதி என்ன ஆனது? திருமணத்திற்கு ரோஜா சம்மதித்தாரா இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை. 

மிகவும் ஒரு சுமாரான கதையை வைத்துக்கொண்டு நாம் ஏற்கனவே பார்த்து பழகிய திரைக்கதையோடு இப்படத்தை இயக்கி நடித்து இருக்கிறார் பாரி இளவழகன். என்னதான் சொல்ல வந்த விஷயம் ஏற்கனவே பார்த்து பழகியவைகளாகவே இருந்தாலும் திரைக்கதை சுவாரசியமும் கதை மாந்தர்களும் மிக சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் தன் பங்களிப்பை கொடுத்து படத்துடன் நம்மை ஒன்றை வைத்து ஆரம்பம் முதல் இறுதி வரை எந்த ஒரு இடத்திலும் தொய்வு இல்லாமல் கலகலப்பாக கொண்டு சென்று ஒரு வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார் பாரி இளவழகன்.

படம் ஆரம்பித்து இறுதிவரை விறுவிறுப்பாகவும் வேகமாகவும் கலகலப்பாகவும் நகர்ந்து இறுதி கட்டத்தில் ஒரு நல்ல மெசேஜோடு நிறைவடைகிறது. ஜாதி என்பது நம் நாட்டில் ஒழிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் என்பதை லைட் ஹார்ட்டடான இந்த மூவி மூலம் சிறப்பான முறையில் கூறியிருக்கின்றனர். குறிப்பாக திரைக்கதையில் அயர்ச்சி இல்லாமல் சிறப்பான முறையில் காட்சி அமைப்புகளை கொடுத்து குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கும்படி படம் உருவாகியிருப்பது படத்திற்கு பெரிய பிளஸ் ஆக மாறி படத்தையும் கறை சேர்த்திருக்கிறது. 

நாயகன் பாரி இளவழகன் பக்கத்து வீட்டு பையன் போல் ஒரு கதாபாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதை சிறப்பான முறையில் கையாண்டு இருக்கிறார். ஏற்கனவே ஜமா படத்தில் இவரின் கதாபாத்திரம் பெரிதாக பேசப்பட்டது. அதேபோல் இந்த கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்திருக்கிறார். படத்தின் இன்னொரு நாயகன் என்று பார்த்தால் நாயகனின் அப்பா சேத்தன்தான். இவரின் கலகலப்பான ஜனரஞ்சகமான நடிப்பு படத்தின் இன்னொரு நாயகனாகவே மாறி இருக்கிறது. தனக்கு கொடுத்த வேலையை மிக மிக சிறப்பாகவே செய்திருக்கிறார். பொதுவாக அனைத்து படங்களிலும் வில்லனாக மிரட்டும்படி கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெறும் இவர் இந்த படத்தில் வித்தியாசமாக காமெடி கதாபாத்திரத்தில் நடித்து கைதட்டல் பெற்று இருக்கிறார்.

அம்மாவாக வரும் ரோஜா நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தெலுங்கு பெண்ணாகவே நடித்து இருக்கும் இவர் அந்த கதாபாத்திரத்தை சிறப்பான முறையில் செய்து இருக்கிறார். ஆரம்ப கட்டத்தில் ஜாதி வெறி பிடித்திருக்கும் இவர் போக போக அதிலிருந்து மாறும் படியான கதாபாத்திரத்தில் சிறப்பான முறையில் பங்களிப்பு செய்து ரசிக்க வைத்து மீண்டும் ஒருமுறை பல ஆண்டுகளுக்கு பிறகு கவனம் பெற்று இருக்கிறார். 

ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக வரும் ரம்யா அந்த கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார். பொதுவாக ஆங்கிலோ இந்தியன் பெண்கள் என்றாலே மிகவும் அசால்டாக ஆட்டி-டியூடாக எந்த ஒரு கவலையும் இன்றி மிடுக்கானவர்களாவே காணப்படுவர். அவர்களுக்கு பெரிதாக கமிட்மெண்ட்ஸ் இருக்காது. அப்படியான ஒரு கதாபாத்திரத்தை ஜஸ்ட் லைக் தட் என கையாண்டு கவனம் பெற்று இருக்கிறார் ரம்யா. அதேபோல் தோற்றமும் உடல் அசைவும் உடல் மொழியும் அந்த கதாபாத்திரமாகவே மாறி கவர்ந்து இருக்கிறார்.

பாரியின் நண்பராக வரும் பரிதாபங்கள் கோபி பெங்களூர் தமிழராக நடித்திருக்கிறார். இதுவரை தமிழ் சினிமாவில் பெங்களூர் தமிழ் எந்த படத்திலும் வந்ததில்லை. அதை திறன் பட கையாண்டு சிறப்பான முறையில் அந்த பாஷை பேசி பார்ப்பவர்களை ரசிக்க வைத்திருக்கிறார். இதில் இயக்குநருக்கு பெரும் பங்கு இருக்கிறது, அதை இயக்குநரும் சரியான முறையில் கையாண்டிருப்பது கூடுதல் சிறப்பு. மற்றபடி முக்கிய கதாபாத்திரத்தில் வரும் செல் முருகன், ஆங்கர் சுதர்சன் காந்தி, இஸ்மத் பானு உட்பட பலர் அவரவர் வேலையை சிறப்பாக செய்திருக்கின்றனர்.

பரத் சங்கர் இசையில் பாடல்கள் ஜென்-ஸிகளை கவரும் வகையில் அமைந்திருக்கிறது. பின்னணி இசை சிறப்பான முறையில் அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக மாறி இருக்கிறது. ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். பெரம்பூர் மற்றும் அதை சுற்றுவட்டார பகுதிகளை சிறப்பான முறையில் காட்சிப்படுத்தி குறிப்பாக ஒண்டர்லாந்து காட்சிகளை பட்டாம்பூச்சிகளோடு அழகான கலர்ஃபுல்லான காட்சிகளாக வெளிக்கொண்டு வந்திருப்பது கூடுதல் சிறப்பு. இவரின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.

ஒரு சராசரியான காதல் கதையை கையில் எடுத்துக்கொண்டு அதை சிறப்பான முறையில் திரைக்கதை அமைத்து குடும்பங்கள் கொண்டாடும் கலகலப்பான காமெடி கலந்த காதல் படமாக இந்த படத்தை உருவாக்கி வெற்றி பெற்று இருக்கிறார், நடிகர் – இயக்குநர் பாரி இளவழகன். குறிப்பாக 20 நிமிடங்கள் ஓடும் அந்த கிளைமாக்ஸ் காட்சி மட்டுமே இந்த திரைப்படத்திற்கு போதுமான அளவு கலகலப்பை கொடுத்திருப்பது கூடுதல் சிறப்பு. அந்த காட்சிக்காகவே இந்த திரைப்படத்தை காணலாம் என்ற அளவுக்கு கலகலப்பாக அமைந்திருக்கிறது. குறிப்பாக இறுதி கட்ட காட்சிகளில் பாரி கமலஹாசன் போல் பல்வேறு பாஷைகள் பேசுவது, சிறப்பாக படமாக்கப்பட்டு படத்தின் ஹைலைட்டாக அமைந்திருக்கிறது. 

அன்பே டயானா – மஸ்த்து மூவி!

Source link