சென்னை: நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு முதல்வர் அலுவலகம் மாறுவதால், அரசு துறை ஆய்வு கூட்டங்கள், இனிமேல் கலைவாணர் அரங்கில் நடத்தப்பட உள்ளன.
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள கோட்டை பாரம்பரிய கட்டடத்தின் முதல் தளத்தில், முதல்வர் அலுவலகம் இயங்கி வருகிறது. இதை, அருகில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை, 10வது தளத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த தளத்தில், கருத்தரங்க கூடம், உணவருந்தும் கூடம் ஆகியவை உள்ளன.
முதல்வர் தலைமையிலான அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டம், கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு, அனைத்து கட்சி கூட்டம், கருத்துகேட்பு கூட்டம் ஆகியவை, இங்கு நடத்தப்பட்டு வந்தன.
தற்போது, கருத்தரங்க கூடம் மற்றும் உணவு கூடம் அகற்றப்பட்டு உள்ளன. கருத்தரங்க கூடத்தில் இருந்த இருக்கைகள், மேஜைகள், ஒலிபெருக்கிகள், டிஜிட்டல் திரைகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டு வருகின்றன.
அதனால், அரசு துறை ஆய்வு கூட்டங்கள், இனி சேப்பாக்கம் வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடத்தப்பட உள்ளன. தமிழக அரசின் பட்ஜெட், ஆகஸ்ட் 5ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையடுத்து, பட்ஜெட் தொடர்பான இறுதி ஆலோசனை கூட்டத்தை, முதல்வர் தலைமையில் இங்கு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
