கல்குவாரிக்கு சென்று பணம் கேட்டு மிரட்டல்- தவெக நிர்வாகி சகோதரருடன் கைது

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே  பத்மநாப மங்கலத்தில் சித்திரை செல்வன் என்பவர் கல்குவாரி தொழில் செய்து வருகிறார். ஜூலை 25 ஆம் தேதியன்று தவெக ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றியச் செயலாளர்  பாலமுருகன் (33) தனது அண்ணன் முண்டன் (26) என்ற முண்டசாமியுடன் பத்மநாபமங்கலத்தில் உள்ள கல்குவாரிக்கு சென்று  தங்களுக்கு மாதந்தோறும் ஒரு பெரிய தொகை பணம் மாமூலாக கொடுக்க வேண்டும் என கேட்டு மிரட்டியுள்ளார். அவ்வளவு தொகை தங்களால் கொடுக்க முடியாது என அங்கிருந்த கல்குவாரி நிர்வாகிகள் மறுத்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த தவெக ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் பாலமுருகன்  மற்றும் அவரது அண்ணன் முண்டசாமி ஆகியோர் அரிவாளை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்து மிரட்டி உள்ளனர். பின்னர் கல்குவாரி அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர், டிவி, பைக் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கி சூறையாடி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கல் குவாரி மேலாளர் பூலோக பாண்டியன் ஸ்ரீவைகுண்டம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, தமிழக வெற்றிக் கழக ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றியச் செயலாளர் பாலமுருகன் மற்றும் அவரது சகோதரர் முண்டன் என்ற முண்டசாமி ஆகிய இருவர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 25ஆம் தேதி இரவு இருவரையும் அதிரடியாக கைது செய்தனர்.

தவெக கட்சியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கொடுத்த பாலியல் குற்றச்சாட்டு புகாரில் ஸ்ரீ வைகுண்டம் தொகுதி எம்எல்ஏ சரவணனின் தீவிர ஆதரவாளரான தவெக இளைஞரணி பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன் கடந்த ஜூன் மாதம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அந்த சம்பவத்தில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சரவணனின் பெயரை சொல்லித்தான் என்னை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர் என பாதிக்கப்பட்ட அந்த பெண் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து இருந்தார்.

7737

அந்தப் சச்சரவும் சர்ச்சையும் ஓய்வதற்கு முன், தற்போது அதற்கு அடுத்தபடியாக ஸ்ரீ வைகுண்டம் ஒன்றியச் செயலாளர் பாலமுருகன் கல்குவாரியில் பணம் கேட்டு மிரட்டிய புகாரில் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணியில் உள்ள மற்ற தவெக நிர்வாகிகள் குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கல்குவாரி அலுவலகத்தில் அரிவாளை காட்டி மிரட்டி தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள் இன்னும் நிறைய வீடியோக்கள் வெளிவரும். அதில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சரவணனின் பெயரைச் சொல்லி அவரது ஆதரவாளர்கள் பணம் கேட்டு மிரட்டும் வீடியோக்களும் இருக்கிறது என தவெக நிர்வாகிகள் தங்களுக்குள் பேசி வருவதும் தூத்துக்குடி மாவட்ட தவெக வட்டாரத்தில் பரபரப்பை எகிற வைத்துள்ளது.

செய்தியாளர்: மூர்த்தி 

Source link