தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மழை பெய்கிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக சமூகநீதித்துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான வன்னி அரசு இன்று (25.10.2026) நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட அமைச்சர், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டார்.
அதிலும் குறிப்பாக, மழையினால் வாழ்வாதாரத்தை இழந்த பொதுமக்களை உடனடியாகப் பாதுகாப்பான நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும், அவர்களுக்குத் தேவையான தரமான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கள்ளக்குறிச்சியில் கடும் மழை. கள்ளக்குறிச்சி பொறுப்பு அமைச்சர் என்ற முறையில் இன்று மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பத்மஜாவுடன் பார்வையிட்டோம்.
மழையால் பாதிப்புக்குள்ளான மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைப்பது மற்றும் உணவு வழங்குவது தொடர்பாக வழிகாட்டல் செய்தோம். வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்றுவதற்கான தயாரிப்பு நடவடிக்கைகள் மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்கிறது. எந்த பதற்றமும் அச்சமும் மக்களிடையே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏதேனும் ஆபத்து என்றால் 1077 என்னும் எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
