கள்ளமௌனம் சாதித்து வேடிக்கைப் பார்க்கும் தவெக அரசு.. தமிழ்நாட்டுக்கு செய்யும் பச்சைத்துரோகம்: கொந்தளித்த சீமான் – ntk seeman slams cm vijay regarding tamil thai vazhthu issue

இன்றைய தினம் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் வந்தே மாதரம் முதலில் பாடப்பட்டு, மூன்றாம் இடத்துக்கு தமிழ்த்தாய் வாழ்த்து தள்ளப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்கள் முன்வைத்து வரும் நிலையில், தவெக தலைமையில் இருந்து எந்த கருத்துக்களும் வெளியிடப்படாமல் உள்ளது. இந்நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டுள்ளது தொடர்பாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது தான் வழக்கம். அவ்வப்போது ஆளுநர்கள் இந்த நடைமுறையை மாற்றும் போது மிகப்பெரிய அளவில் சர்ச்சைகள் வழக்கம். இந்நிலையில் தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக இன்றைய தினம் பட்டமளிப்பு விழாவில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டுள்ளது. தொடர்ந்து தேசிய கீதமும், கடைசி இடத்திற்கு தமிழ்த்தாய் வாழ்த்தும் தள்ளப்பட்டுள்ளது. இந்நிகழ்வு தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன.

அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதா? போராடிப் பெற்ற உரிமைகளை தவெக அரசு தாரைவார்ப்பதா? என்று கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து அவரின் பதிவில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதிய பெருமகனார் மனோன்மணியம் சுந்தரனாரின் பெயரிலிருக்கும் பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாயை அவமதிப்பு செய்யும் விதமாக நடந்தேறிய இந்தச் செயல்பாடு கடும் கண்டனத்துக்கு உரியது.

இத்தனை ஆண்டுகால வரலாற்றில் தமிழ்நாட்டின் பல்கலைக்கழகம் ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பது என்பது இதுவே முதல் முறையாகும். முதலாவதாக வந்தே மாதரம் எனும் மதச்சார்பு கொண்டப் பாடலை பாடி, மூன்றாம் இடத்துக்கு தமிழ்த்தாய் வாழ்த்து தள்ளப்பட்டு இருப்பது தமிழுக்கும், தமிழர்களுக்கும் நேர்ந்த பெரும் அவமானமாகும் என்ற விமர்சனத்தை தன்னுடைய பதிவில் முன்வைத்துள்ளார் சீமான்.

தொடர்ந்து துணைவேந்தர் சந்திரசேகர் வாயிலாக ஆளுநர் அர்லேகர் அழுத்தத்தின் பெயரில் இவ்வாறு நடக்க போகிறது என்பதை முன்பே அறிந்தும்கூட, அதற்கு எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல், கள்ளமௌனம் சாதித்து வேடிக்கைப் பார்க்கும் தவெக அரசுடைய அணுகுமுறை கையாலாகாத்தனத்தின் உச்சமாகும். கொள்கை எதிரி என்று மேடையில் அறிவித்து விட்டு, பாஜக எதிர்ப்பையே முழுமையாக மறந்து போய், ஒன்றிய அரசிடம் சரணாகதி அடைந்துவிட்டார் முதல்வர் விஜய்.

அவர் இதுநாள் வரைக்கும் தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வரும் மரபுகளையும், போராடிப் பெற்ற உரிமைகளையும் மொத்தமாய் தாரை வார்ப்பது தமிழ்நாட்டுக்கு செய்யும் பச்சைத் துரோகமாகும். இதனை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது தொடர்பாகவும், முதல்வரின் மௌனம் குறித்தும் கடுமையான விமர்சனங்களை சீமான் முன்வைத்துள்ளது பரபரப்பினை கிளப்பியுள்ளது.

Source link