இதனடிப்படையில், சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் மற்றும் திருச்சியைச் சேர்ந்த நரேஷ் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன. மற்றொருபுறம் இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றம், செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கியது.
அதனை தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக நாமக்கல்லைச் சேர்ந்த டாக்டர் ராஜசேகர், சேதுராஜன் என இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் கைது செய்யப்பட்ட ஒருவரிடமிருந்து ரூ. 50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியானது. இந்த கைதைத் தொடர்ந்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாகச் சிங்கப்பூரில் உள்ள லட்சுமனபெருமாள் என்பவருக்கு எதிராகச் சென்னை காவல் துறை சார்பில் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இவர் சிங்கப்பூரில் இருந்தபடி சம்பந்தப்பட்ட ஹோட்டலில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள், வாட்ஸ்அப் செய்திகளை அழித்தாக கூறப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக திருவல்லிக்கேணி காவல்துறையினர் இன்று (18-07-26) மேலும் மூன்று பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதாவது கொரட்டூரைச் சேர்ந்த கருணாநிதி, சரவணன், வினோத் வெங்கடேஷ் ஆகிய 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் போது, ரூ.2.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பணத்தின் பின்னணி என்ன? சட்டமன்ற உறுப்பினருக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டதா? என்பது குறித்தெல்லாம் போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
