காங்கிரஸுக்காக உழைத்த மு.க. ஸ்டாலின்.. மனம் திறந்த செல்வப்பெருந்தகை: கட்சி மாறுகிறாரா? – congress selvaperunthagai said about dmk leader mk stalin

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவரான செல்வப்பெருந்தகை, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி முறியாமல் இருக்க முக்கிய காரணமாக இருந்தார். இதனையடுத்து தேர்தலுக்கு பின்பாக தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் கூட்டணியிலும் இணைந்தது. அதே போல் மாநில தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை தனது பொறுப்பில் இருந்தும் நீங்கினார். அதன்பின்னர் சைலண்ட் மூடில் இருந்த அவர், தற்போது திமுகவுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருவது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்று கொண்டிருக்கிறது.

திமுக – காங்கிரஸ் கூட்டணி

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தவெகவுடன் கூட்டணி அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சியை சார்ந்த சிலர் விரும்பினார்கள். அதே நேரம் மாநில தலைவரான செல்வப்பெருந்தகை, ப. சிதம்பரம் உள்ளிட்டோர் திமுக கூட்டணியிலே காங்கிரஸ் பயணிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். அதே போல் திமுக கூட்டணியுடன் தேர்தலை சந்தித்த காங்கிரஸ், தேர்தல் முடிவு வெளியான அன்றே தவெக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளித்தது.

முன்னாள் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை

அதே போல் இனிவரும் தேர்தல்களை தவெக கூட்டணியில் இருந்தே எதிர்கொள்வோம் எனவும் காங்கிரஸ் அறிவித்தது. இதனிடையில் மாநில தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை அந்த பொறுப்பில் இருந்து விலகி, மாணிக்கம் தாகூர் புதிய மாநில தலைவராக பொறுப்பேற்று கொண்டார். இந்நிலையில் சமீப காலமாகவே சைலண்ட் மூடில் இருக்கும் செல்வப்பெருந்தகை தனியார் இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு காங்கிரஸ் விசுவாசமாக இல்லையோ என்ற வருத்தம் தனக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

வெற்றி வாகை சூடிய திமுக

அதாவது அவர் கூறுகையில், கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் திமுக தலைமையிலான கூட்டணி ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி 40 க்கு 40 என்ற அளவில் வெற்றி வாகை சூடியது. இதே போன்று காங்கிரஸ் ஆட்சி செய்து கொண்டிருக்கும் கர்நாடகா, தெலங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஒரு வெற்றியை பெற்றிருந்தால் கடந்த நாடாளுமன்ற தேர்தலிலே ராகுல் காந்தி பிரதமர் ஆகியிருப்பார் என்ற கருத்தினை தெரிவித்துள்ளார் செல்வப்பெருந்தகை.

நாங்கள் விசுவாசமாக இல்லையோ என்ற வருத்தம்

மேலும் மு.க. ஸ்டாலின் அர்ப்பணிப்புடன் செய்த பணியை காங்கிரஸ் கட்சி செய்ய தவறி விட்டதோ என்ற வேதனை தனக்குள் இருப்பதாகவும் அவர் பகிர்ந்துள்ளார். தொடர்ந்து காங்கிரஸ் மாநில தலைவராக நானும் உடனிருந்து இதையெல்லாம் பார்த்த காரணத்தால் சொல்கிறேன். இப்படியெல்லாம் காங்கிரஸ் கட்சிக்காக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உழைத்தார். ஆனால் அவருக்கு நாங்கள் விசுவாசமாக இல்லையோ என்ற வருத்தம் இப்போதும் தனக்கும் இருப்பதாகவும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணி ஜெயித்தாலும்…திமுகக்கு ஆட்சிக்கு வராது! BJP Kalyanaraman interview

கட்சி மாற போகிறாரா?

சமீப காலமாக அரசியல் ரீதியாக கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருக்கும் அவர், தற்போது திமுக மற்றும் அதன் கட்சி தலைவர் குறித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்று வருகிறது. இதனையடுத்து காங்கிரஸில் இருந்து விலகி செல்வப்பெருந்தகை திமுகவில் இணைய போகிறாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அதே போல் தற்போது பிரதமர் வேட்பாளர் தொடர்பாக தவெக, காங்கிரஸ் இடையில் கருத்து வேறுபாடுகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Source link