புதுடில்லி: 2009ம் ஆண்டு முதல் நாட்டின் பல்வேறு வாரியங்களில் நடத்தப்பட்ட தேர்வுகளில் வினாத்தாள்கள் கசிந்தன என்று லோக்சபாவில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பட்டியலிட்டு எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி தந்தார்.
பார்லிமெண்ட் கூட்டத்தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்கினாலும் நாள்தோறும் எதிர்க்கட்சிகளின் அமளி, கூச்சல்,குழப்பத்தால் ஒத்தி வைக்கப்பட்டன. அவை நடவடிக்கைகளும் முடங்கியது. வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகிவிட்ட நிலையில் இன்று பார்லி. கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனாலும், அவையில் எதிர்க்கட்சிகள் குறுக்கீடு செய்து கொண்டே இருந்ததால் நடவடிக்கைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டன. பிற்பகலில் இரு அவைகளும் கூடின. ஆனால் ராஜ்ய சபாவில் எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்ததால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
லோக்சபாவில், வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மீதான விவாதம் தொடங்கியது. இந்த விவாதத்தில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் எந்தெந்த தேர்வுகளின் கேள்வித்தாள் எந்தெந்த ஆண்டுகளில் கசிந்தன என்று விரிவாக பட்டியலிட்டார்.
அவர் தமது விவாதத்தில் கூறியதாவது;
2009ல் ரயில்வே தேர்வு வாரியம், 2011ல் அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு, 2012ல் டில்லி எய்ம்ஸ் நுழைவுத்தேர்வு வினாத்தாள் கசிவு, 2013ல் மஹாராஷ்டிரா இடைநிலைக்கல்வி தேர்வின் போது வினாத்தாள் கசிவு என அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
இவ்வாறு அடுக்கிக் கொண்டே போனால், மசோதா குறித்து விவாதிக்க நேரமே இருக்காது. 2010ல் உ.பி மாநில பிஎட் நுழைவுத் தேர்வு, 2012ல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், 2009ல் மேற்கு வங்கம் நுழைவுத்தேர்வு என கடந்த காலங்களில் வினாத்தாள் கசிந்தது.
எனவே இதுபோன்ற சம்பவங்களை தடுக்க பிரத்யேக சட்டம் தேவை என்பதை அரசு உணர்ந்தது. மத்திய அரசின் கீழ் பணியாளர்களை தேர்வு செய்ய யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ரயில்வே வாரியம், வங்கி பணியாளர் தேர்வு வாரியம் ஆகிய 4 தேர்வு முகமைகள் உள்ளன.
அதேபோல, உயர்கல்வி சேர்க்கைக்கு என தேசிய தேர்வுகள் முகமை இருக்கிறது. இந்த முகமையும் இதே அரசால் 2017ல் உருவாக்கப்பட்டது. 1992ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியின் போது மத்திய அரசிடம் ஒரு பொதுவான தேசியத் தேர்வுகள் முகமை அமைப்பதற்கான பரிந்துரை அளிக்கப்பட்டது.
பின்னர் 2010ம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்திலும் ஒரு குழுவானது இதே போன்றதொரு பரிந்துரையை வழங்கியது. என்ன காரணங்களினாலோ அதன் மீது எந்த கவனமும் செலுத்தப்படவில்லை.
நீங்கள் செய்திருக்க வேண்டிய பணியை, அதாவது முடிக்கப்படாமல் இருந்த நடவடிக்கையை இந்த அரசு செய்து முடித்திருக்கிறது. எனவே, பிரதமர் மோடியையும், இந்த அரசையும் நீங்கள் (எதிர்க்கட்சிகளை குறிப்பிடுகிறார்) பாராட்ட வேண்டும்.
இவ்வாறு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசினார்.
