காஜியாபாத்: உத்தர பிரதேசத்தின் காஜியாபாத் மாவட்டத்தில் உள்ள கவுசாம்பி பகுதியைச் சேர்ந்த சிலர், நம் நாட்டில் உள்ள முக்கிய இடங்களை படம் பிடித்து, பாகிஸ்தானில் உள்ள நபருக்கு அனுப்புவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் சோதனையிட்ட போலீசார், ஆறு பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்திய தனிப்படை போலீஸ், நம் அண்டை நாடான நேபாளத்தைச் சேர்ந்த கணேஷ் உட்பட ஒன்பது பேரை கடந்த 21ல் கைது செய்தது. இந்த விவகாரத்தில் நவுஷத் அலி, அவரின் கூட்டாளி மீரா மற்றும் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவன் ஒருவன் கடந்த 22ல் கைது செய்யப்பட்டனர்.
முக்கிய குற்றவாளியான சமீர் என்ற ‘ஷூட்டர்’ தேடப்பட்டு வந்தார். டில்லியில் பதுங்கியிருந்த அவரை, போலீசார் கைது செய்தனர். அவருடன், சமீர் என்ற மற்றொரு நபரும், ஷிவ்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் சேர்த்து, இந்த வழக்கில் இதுவரை ஆறு சிறுவர்கள் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இது குறித்து, காஜியாபாத் கூடுதல் போலீஸ் கமிஷனர் கரண் நாயர் கூறியதாவது: டில்லி மற்றும் பிற மாநிலங்களில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்கள், ராணுவ முகாம்கள், போலீஸ் தலைமை அலுவலகங்கள் போன்ற இடங்களுக்கு நேரில் சென்று உளவு பார்த்த நவுஷத் அலி, அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை, பாகிஸ்தானில் உள்ள சர்தார் என்ற ஜோராவர் சிங் என்பவருக்கு அனுப்பி வந்துள்ளார்.
ஒரு முறை படம் எடுத்து தருபவர்களுக்கு 5,000 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, பாகிஸ்தானில் இருந்து நம் நாட்டு பஞ்சாப் மாநில எல்லை வழியாக சட்டவிரோதமாக அவர் நிதியுதவி பெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
