சென்னை: தமிழக அரசின், ‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்’ என்ற, ‘டாப்ஸ்’ திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில், சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
சென்னை எழிலகம் வளாகத்தில் நடந்த போராட்டத்தில், ஏராளமான அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று, வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டம் குறித்து, மாநில ஒருங்கிணைப் பாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன் கூறியதாவது:
கடந்த தி.மு.க., ஆட்சியில், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட, ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. இதை ஆரம்பம் முதலே, சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் எதிர்த்து வருகிறது. தேர்தல் நேரத்தில், த.வெ.க., ‘டாப்ஸ்’ ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவித்தது.
தேர்தல் வாக்குறுதியின்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, உயர்மட்ட குழு கூடி நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
