ஸ்ரீபெரும்புதூரில் காணாமல் போன 8 வயது சிறுமி சென்னையில் மீட்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி இருவர், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தனது 8 வயது மகளுடன் வசித்து வந்தனர். இதனிடையே கடந்த 16ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி காணாமல் போனதாக சிறுமியின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் சிறுமியை 4 நாட்களாக போலீசார் தேடி வந்த நிலையில், இன்று சென்னை ரயில்வே நிலையத்தில் மீட்கப்பட்டார்.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அதன்படி, தாய் ஸ்ரீபெரும்புதூரில் குழந்தையுடன் வசித்து வருகிறார். தந்தை ஹைதராபாத்தில் தனியார் வசித்து வருகிறார். இந்த சூழலில், மகளை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு ஆதார் கார்டில் பெயர் நீக்கம் செய்வதற்காக தாயார் சில தினங்களுக்கு முன்பு ஜார்க்கண்ட் சென்றுள்ளார். இதையடுத்து, கடந்த 16ஆம் தேதி நள்ளிரவு தாயாரை பார்ப்பதற்காக சிறுமி ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்தில் இருந்து பூந்தமல்லி சென்று அங்கிருந்து சென்னை ரயில்வே நிலையம் சென்றுள்ளார். அங்கு சென்ற சிறுமி செய்வதறியாமல் திகைத்து அங்கும் இங்கும் சுற்றி திரிந்துள்ளார்.
அடுத்த நாள் அதிகாலையின் போது சிறுமியை கண்ட ரயில்வே போலீசார், சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அந்த சிறுமி வடமொழியில் ஜார்க்கண்ட் செல்ல வேண்டும் என்று கூறியதைத் தொடர்ந்து அவரை அங்கிருக்கக்கூடிய அரசு காப்பகத்தில் வைத்துள்ளனர். இந்த சூழலில் சிறுமி காணாமல் போனதாக 17ஆம் தேதி வழக்குப்பதிவு செய்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார், தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்துள்ளனர்.
500க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி சிறுமியை தீவிரமாக தேடி வந்த நிலையில், அவர் சென்னை ரயில்வே நிலையத்திற்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி சென்னை ரயில்வே போலீசார் தொடர்புக் கொண்டு தகவல் கேட்டுள்ளனர். சிறுமி அரசு காப்பகத்தில் இருப்பதாக ரயில்வே போலீசார் கூறியதைத் தொடர்ந்து அவரை போலீசார் பத்திரமாக மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 4 நாட்களாக சிறுமி காணாமல் போனதாக போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், அவர் தன்னிச்சையாக பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து ரயில்வே நிலையத்திற்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
