உல்லாஸ்நகரில் காதலை கைவிட மறுத்த மகளை கழுத்தை நெரித்து கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.
காதலுக்கு எதிர்ப்பு
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் உல்லாஸ்நகர் பையாசாகேப் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் தத்தா காவத். இவருடைய மனைவி ஆஷா (வயது40). இவர்களது மகள் அம்ருதா (19). அம்ருதா அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த காதலுக்கு அவரது தாய் ஆஷா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
தாய் – மகள் வாக்குவாதம்
இந்தநிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் வீட்டில் இருந்த அம்ருதாவிடம், அவரது தாய் ஆஷா காதலை மீண்டும் கண்டித்துள்ளார். அந்த வாலிபருடனான தொடர்பை உடனடியாக துண்டித்து கொள்ளுமாறு மகளை வற்புறுத்தினார். ஆனால், அம்ருதா தனது காதலை கைவிட மறுத்து தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மகள் உயிரிழப்பு
இதனால் ஆத்திரமடைந்த ஆஷா, மகளின் கழுத்தில் கிடந்த துப்பட்டாவை எடுத்து அவரது கழுத்தை இறுக்கினார். இதில் மூச்சுத்திணறி அம்ருதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தந்தை புகார்
இதுகுறித்து அம்ருதாவின் தந்தை அளித்த புகாரின் பேரில், உல்லாஸ்நகர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, தாய் ஆஷாவை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகள் என்றும் பாராமல் பெற்ற தாயே அவளை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
