காந்தி நினைவிடம் கிளம்பிய ராகுல்: தடுத்து நிறுத்திய போலீசார்

புதுடில்லி: டில்லியில் போராட்டம் நடத்துபவர்களுக்கு ஆதரவாக மஹாத்மா காந்தி நினைவிடம் நோக்கி செல்ல முயன்ற ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்களை டில்லி போலீசார் தடுத்து நிறுத்தினர்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் சிஜேபி இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் இல்லம் நோக்கி பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல், பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு பிறகு அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்களுடன் ராகுல் தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள், திரிணமுல் காங்கிரசின் மஹூவா மொய்த்ரா, இந்திய கம்யூனிஸ்ட் எம்பி சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து ராகுல் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அனைவரும் காந்தி நினைவிடம் செல்ல பஸ்சில் கிளம்பினர். ஆனால், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது ராகுல் கூறியதாவது: மாணவர்கள் சாலையில் போராடுகின்றனர். எனவே எதிர்க்கட்சி எம்பிக்கள் அனைவரும் சாலையில் இருக்க வேண்டும் என நினைத்தோம். அனைத்து எம்பிக்களும் இந்தியா கேட் செல்ல விரும்பினோம். போலீசார் அனுமதி மறுத்தனர். இதன் பிறகு காந்தி நினைவிடம் செல்ல வேண்டும் என்றோம்.ஆனால், நாங்கள் வந்த பேருந்தை இங்கே நிறுத்தி வைத்துள்ளனர். இதன் மேல் எங்களால் செல்ல முடியவில்லை. ஆனால், மாணவர்களுக்கான முக்கியமான செய்தி ஒன்று. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Source link