காமன்வெல்த் கபடி: இந்தியா கலக்கல்

ஆமதாபாத்: காமன்வெல்த் கபடி போட்டியில் இந்திய பெண்கள், ஆண்கள் அணிகள் ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தன.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் முதல் சீசன் நடக்கிறது. இதில் 13 ஆண்கள், 10 பெண்கள் அணிகள் பங்கேற்கின்றன.

‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய பெண்கள் அணி, நேற்று நடந்த லீக் போட்டியில் உகாண்டா அணியை எதிர்கொண்டது. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்தியா 41–18 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. முதலிரண்டு போட்டியில் மலேசியா (73–13), சிங்கப்பூர் (32–16) அணிகளை வீழ்த்திய இந்தியா, ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் ‘ஏ’ பிரிவில் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி, தனது கடைசி லீக் போட்டியில் இன்று நைஜீரியாவை சந்திக்கிறது.

‘ஏ’ பிரிவில் உள்ள இந்திய ஆண்கள் அணி, நேற்று நடந்த லீக் போட்டியில் மலேசியாவை சந்தித்தது. இதில் இந்திய அணி 37–23 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. ஏற்கனவே இங்கிலாந்து (46–26), உகாண்டாவை (44–30) வீழ்த்திய இந்தியா, தொடர்ச்சியாக 3வது வெற்றியை பெற்றது. ‘ஏ’ பிரிவில் இந்தியா, இலங்கை அணிகள் தலா 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளன.

Source link