கிளாஸ்கோ: காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவுக்காக தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டி வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடந்து வரும் காமன்வெல்த் விளையாட்டின் ஆண்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவு போட்டி நடைபெற்றது. இதில், இந்தியா சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி கலந்து கொண்டார்.
ஸ்னாட்ச் மற்றும் க்ளீன் அன்ட் ஜெர்க் சுற்றுகளில் (126 + 160) மொத்தம் 286 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். மலேசியாவின் அஷ்னில் பின் பிடின் முகமது 299 கிலோ எடையைத் தூக்கி தங்கம் வென்றார்.
வெற்றி குறித்து அவர் கூறுகையில், ‘தங்கம் வெல்வதற்கான திறனை நான் வெளிப்படுத்தவில்லை. குறிப்பாக, பயிற்சியின் போது செயல்பட்டதை ஒப்பிடும் போது, நான் திறம்பட செயல்படவில்லை. இருப்பினும், வெள்ளி வென்றது மகிழ்ச்சியை அளிக்கிறது.
எனக்கு பக்கபலமாக இருந்த இந்திய விளையாட்டு ஆணையம், பளுதூக்கும் கூட்டமைப்பு மற்றும் என்னுடைய பயிற்சியாளர் விஜய் ஷர்மா ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,’ எனக் கூறினார்.
போட்டியின் 4வது நாள் நிறைவில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களுடன், பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. இதில், வெண்கலத்தை தவிர எஞ்சிய 3 பதக்கங்களும் பளு தூக்குதலில் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
