ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய வீரர் ராஜா முத்துபாண்டி ஆடவர் 65 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இந்தப் போட்டியில் ஸ்னாட்ச் பிரிவில் 126 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 160 கிலோவும் வெற்றிகரமாகத் தூக்கிய ராஜா முத்துபாண்டி, மொத்தமாக 286 கிலோ எடையைத் தூக்கி இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
அதே பிரிவில் மலேசிய வீரர் பின் பிடின் 299 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்தையும், பப்புவா நியூ கினி வீரர் மொரியா 282 கிலோ எடையுடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
Credit: DD News Rajasthan
भारतीय वेटलिफ्टिंग का नया सितारा!
पुरुषों की 65 किलोग्राम भार वर्ग स्पर्धा में राजा मुथुपांडी ने शानदार प्रदर्शन करते हुए जीता रजत पदक #RajaMuthupandi#SilverMedal#Weightlifting#TeamIndia#India#IndianSports#Champion#SportsNewspic.twitter.com/revP49yV54
— DD News Rajasthan (@DDNewsRajasthan) July 27, 2026
ராஜா முத்துபாண்டி கடந்த 2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 62 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று மொத்தம் 266 கிலோ எடையைத் தூக்கி ஆறாவது இடத்தைப் பிடித்திருந்தார். அதன் பிறகு காயம் மற்றும் சிகிச்சை காரணமாக சில ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை.
இதையடுத்து, கடந்த ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் மூலம் மீண்டும் சர்வதேச போட்டிகளுக்கு திரும்பிய அவர், தற்போது கிளாஸ்கோவில் நடைபெற்ற போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சிறப்பான மறுபிரவேசத்தை பதிவு செய்துள்ளார்.
ராஜா முத்துபாண்டியின் இந்த சாதனைக்கு விளையாட்டு ரசிகர்கள், வீரர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். அவரது வெற்றி, சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் மேலும் ஒரு பெருமையை சேர்த்துள்ளது.
