காமன்வெல்த் மகளிர் கபடி: மலேசியாவை வீழ்த்திய இந்தியா; கடைசி கட்டத்தில் அபாரமாக புள்ளிகளை குவித்த கார்த்திகா

காமன்வெல்த் மகளிர் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் மலேசியாவை 60 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதில் தமிழக வீராங்கனை கார்த்திகா கடைசி நேரத்தில் களமிறங்கி அசத்தலாக புள்ளிகளை குவித்தார்.

2026 ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் மகளிர் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில், தலா ஐந்து அணிகளைக் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிந்து மொத்தம் 10 அணிகள் போட்டியிடவுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, நைஜீரியா, சிங்கப்பூர், உகாண்டா மற்றும் மலேசியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் வங்கதேசம், கென்யா, இங்கிலாந்து, இலங்கை மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் உள்ளன. ஒவ்வொரு அணியும் தனது குழுவில் உள்ள மற்ற நான்கு அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். அக்டோபர் 30 அன்று அரையிறுதிப் போட்டிகள் நடைபெறும். மகளிர் பிரிவின் இறுதிப் போட்டி அக்டோபர் 31 அன்று நடைபெறும்.

இந்திய மகளிர் கபடி அணிக்கு கேப்டனாக நிதி சர்மாவும், துணை கேப்டனாக ரிது மிதர்வாலும் உள்ளனர். இந்திய அணியில் தமிழக வீராங்கனை கார்த்திகாவும் இடம்பெற்றுள்ளார். இவர்களுடன் அனு சென், சம்பா தாக்கூர், ஜோதி, முஸ்கன் ஷர்மா, பிரியா, ரேணுகா சவுத்ரி, ரியா குமாரி, சபாய் கதாவி, சாக்ஷி, சிம்ரன் கம்போஜ், சுமன் சாஹு ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்தநிலையில், இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் மலேசியாவை அகமதாபாத் வீர் சாவர்க்கர் விளையாட்டு வளாகத்தில் எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் இந்திய அணி 73 – 13 என்ற புள்ளிகள் கணக்கில் மலேசியாவை 60 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய அணி ரெய்டில் 40 புள்ளிகளையும், டேக்கிளில் 20 புள்ளிகளையும், ஆல் அவுட் முறையில் 12 புள்ளிகளையும், எக்ஸ்ட்ராவாக ஒரு புள்ளியையும் பெற்றது. மலேசிய அணி ரெய்டில் 9 புள்ளிகளையும், டேக்கிளில் 2 புள்ளிகளையும், எக்ஸ்ட்ராவாக 2 புள்ளிகளையும் பெற்றது. முதல் பாதியில் இந்திய அணி 30 – 11 என முன்னிலையில் இருந்தது. இரண்டாம் பாதியிலும் இந்திய அணி மேலும் 43 புள்ளிகளைக் குவித்தது. அதே சமயம் மலேசியா இரண்டாம் பாதியில் வெறும் 2 புள்ளிகளை மட்டுமே எடுத்தது. 

இந்தப் போட்டியில் தமிழக வீரங்கனையான கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு கடைசி சில நிமிடங்கள் தான் களத்தில் இறங்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் ரையிடை எம்டி ரைடாக முடித்த கார்த்திகா, இரண்டாவது ரைடை மூன்று புள்ளிகள் எடுத்து சூப்பர் ரைடாக மாற்றினார். தொடர்ந்து ரைடுக்கு சென்ற ஒவ்வொரு முறையும் புள்ளிகளை கடைசி கட்டத்தில் அபாரமாக குவித்தார்.

Source link