காமராஜர் காலை உணவு திட்டம்; நிபந்தனைகளை வெளியிட்டது தமிழக அரசு

நமது நிருபர்

காமராஜர் காலை உணவு திட்ட டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு நிபந்தனைகளை தமிழக அரசு வெளியிட்டது.

மாநகராட்சி, நகராட்சி, ஊரகம் மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள, 1,545 அரசு துவக்க பள்ளிகளில், 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும், 1 .45 லட்சம் மாணவர்கள் பயன் பெறும் வகையில், முதல்வரின் காலை உணவு திட்டம், தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்டது. இதை தொடர்ந்து, நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும், இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது. இத்திட்டம் வாயிலாக, 19.34 லட்சம் மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர்.

தற்போது தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், இத்திட்டத்தை, 6 முதல் 8ம் வகுப்பு வரை, செப்டம்பர் 17ம் தேதி முதல் விரிவாக்கம் செய்ய, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதன் வாயிலாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 15.14 லட்சம் மாணவர்கள் கூடுதலாக பயன் பெறுவர்.முதல்வரின் காலை உணவு திட்டம் என, அழைக்கப்பட்டு வந்த அதன் பெயரும் மாற்றப்பட்டு உள்ளது.

இனி, ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்’ என அழைக்கப்படும். ஆண்டுதோறும் இத்திட்டத்திற்கு, 343 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. நடப்பு 2026 – 27ம் நிதியாண்டில் இத்திட்டத்திற்கு, 217 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. தற்போது டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு நிபந்தனைகளை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:

* காலை 7:30 மணிக்குள் பள்ளிகளுக்கு சூடாக உணவு விநியோகம் செய்ய வேண்டும்.

* உணவு விநியோகம் மொபைல் ஆப் மூலம் கண்காணிக்கப்படும்.

* பள்ளி தலைமை ஆசிரியரின் சான்றிதழ் கிடைத்த பிறகு ஒப்பந்ததாரருக்கு மாதாந்திர பணம் வழங்கப்படும்.

* உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் ஆய்வின் மூலம் உணவின் தரம் கண்காணிக்கப்படும். இவ்வாறு தமிழக அரசு நிபந்தனைகளை விதித்துள்ளது.

Source link