“கால அவகாசம் கொடுங்கள்” – சிறைத்துறை டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் பேட்டி!

தேனி கிளைச் சிறையில் நேற்று (26.10.2026) இரவு சுமார் 10 மணியளவில், மூன்றாவது பிளாக்கில் இருந்த கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, மற்ற கைதிகள் கூச்சலிட்டுள்ளனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த பாரா காவலர் ஸ்டாலின் பிரபு, கைதியின் உடல்நிலையைப் பரிசோதிப்பதற்காக உள்ளே சென்றுள்ளார். அப்போது, அவரைத் தாக்கி நிலைகுலையச் செய்த கைதிகள் சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். அவர்களைப் பிரதான நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர். 

இருப்பினும், காவலர்களைத் தாக்கிய கைதிகள், அவர்களிடமிருந்த சாவிகளைப் பறித்து, பிரதான நுழைவாயிலைத் திறந்து கொண்டு தப்பியோடியதாகச் சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதிகள் தப்பியோடிய தகவல் கிடைத்ததும், காவல்துறையினர் வாகனத் தணிக்கை மற்றும் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளச் சிறப்புக் குழுக்களை அமைத்தனர். ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை மற்றும் சிறப்புப் பணிக் குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

முதற்கட்டமாக, பிரவீன்குமார், சிலம்பரசன், ராஜா சிக்கந்தர், ராஜ்குமார், லிங்க பிரசாத் உள்ளிட்ட 5 கைதிகள் பிடிபட்டனர். அதனைத் தொடர்ந்து, ட்ரோன்கள் மூலம் சிறையைச் சுற்றியுள்ள பகுதிகள் கண்காணிக்கப்பட்டு, மேலும் 8 கைதிகள் கண்டறியப்பட்டுப் பிடிக்கப்பட்டனர். தேனி கிளைச் சிறையில் பாதுகாப்பை மீறி 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மீதமுள்ள 4 கைதிகளையும் பிடிக்கக் காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இதற்கிடையே, தேனி சிறையில் சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “காலையில் இருந்து இங்கே இருக்கிறேன். காவல்துறையின் குழுவினர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இதுவரை மொத்தம் 13 பேரைப் பிடித்துள்ளோம். முதலில், தப்பிச் சென்றவர்கள் யார் யார் என்பதை அடையாளம் கண்டு அவர்களைப் பிடிக்க வேண்டும். அதற்காகத் தமிழ்நாடு காவல்துறை மற்றும் தமிழ்நாடு சிறைத்துறை ஆகிய இரு குழுக்களும் இணைந்து பணியாற்றி வருகின்றன.

முதலில் அதற்கான பணியை முடிப்போம். ஏற்கெனவே செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளோம். எங்களுடைய பணியை ஓரளவுக்கு முடிக்கும் வரை எங்களுக்குக் கால அவகாசம் கொடுங்கள். இதற்குப் பிறகுச் சரியான விவரங்களைத் தெரிவிக்கிறேன். இந்த நடவடிக்கை முடியும் வரை எங்களுக்குக் கால அவகாசம் கொடுங்கள். இதுவரை 13 பேரைப் பிடித்துள்ளோம். மேலும், இதுவரை 9 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.