சென்னை அருகே உள்ள திருமுடிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஏ பிளஸ் வகை ரவுடியான கருப்பு என்கிற தமிழழகு மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், நேற்று (19.07.2026) இரவு ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியின் கூட்டாளி ஒருவர் தமிழழகை சந்திக்க வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், திருமுடிவாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை சம்பவ இடத்திற்குச் சென்று இருவரையும் கைது செய்ய முயன்றது.
அப்போது, போலீசாரை அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ஒரு தலைமைக் காவலரின் கையில் அரிவாள் வெட்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, தற்காப்பு நடவடிக்கையாக காவல் ஆய்வாளர் தனது கைத்துப்பாக்கியால் தமிழழகின் முழங்கால் பகுதியில் சுட்டதாக கூறப்படுகிறது. இதில் தமிழழகின் காலில் குண்டு பாய்ந்தது. இதனையடுத்து தமிழழகையும், அவருடன் இருந்த ஆகாஷ் என்கிற சூர்யா என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.அதோடு காயமடைந்த தமிழழகு சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சூர்யா, ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சிலம்புவின் உறவினர் என கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் நேற்று இரவு ஏதோ ஒரு சதித் திட்டத்திற்காக சந்தித்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இவர்கள் எந்த நோக்கத்திற்காக ஒன்று சேர்ந்தனர், யாருக்கு எதிராக என்ன திட்டம் தீட்டினர் என்பன குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த தலைமைக் காவலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும், அவருக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரபல ரவுடி ஒருவர் போலீசாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட இந்த சம்பவம் திருமுடிவாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
