நாட்டின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கைப் பேணிக் காக்கும் பணியில் ஈடுபட்டு, தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்த தீரமிக்க காவலர்களைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 1959ஆம் ஆண்டு அக்டோபர் 21 அன்று லடாக் பகுதியில் உள்ள ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில், இந்தியப் எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது சீனப் படையினரின் திடீர் தாக்குதலுக்கு அஞ்சாது வீரப்போர் புரிந்து இன்னுயிர் நீத்த 10 மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக இந்த நாள் உருவாக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (21.10.2026, புதன்கிழமை) காலை 10:00 மணியளவில் சென்னை, மயிலாப்பூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் சிறப்பு அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்விற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் நேரில் வருகை தந்து, அங்குள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து, நாட்டின் பாதுகாப்பிற்காகத் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்த தீரமிக்க காவலர்களுக்கு அரசு முறைப்படி வீரவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினார். மேலும் மரக்கன்று ஒன்றையும் முதலமைச்சர் விஜய் நட்டு வைத்தார்.
அதே போன்று தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரும் படைத்தலைவருமான மகேஷ் குமார் அகர்வால்) காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, மலர் வளையம் வைத்து வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தினார். முன்னதாக இது தொடர்பாக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், “1959ஆம் ஆண்டு லடாக் எல்லைப் பகுதியில் தாய்நாட்டைக் காப்பதற்காக வீரமரணமடைந்த 10 மத்திய ரிசர்வ் காவல் படைக் காவலர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தியாகத்தைப் போற்றும் காவலர் வீரவணக்க நாளில், நாட்டில் அமைதியையும், சட்டம்-ஒழுங்கையும் நிலைநாட்டும் உயரிய கடமையில் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்த காவல் துறையினர் அனைவருக்கும் வீர வணக்கங்கள்!
இயற்கைப் பேரிடர்கள், விபத்துகள், குற்றச் சம்பவங்கள், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழல்கள் எனப் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, துணிவுடனும், விழிப்புடனும் பணியாற்றும் காவலர்களின் அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது. கடமையின் பாதையில் இன்னுயிர் நீத்து, அமரர்களான வீரத் தியாகிகளுக்குத் தலைவணங்கி அஞ்சலி செலுத்துவதோடு, காலநேரம் கருதாமல், அயராது உழைத்து, நாட்டின் அரணாகத் திகழும் காவல் துறையினரின் உன்னதப் பணிகளைப் போற்றிடுவோம்!” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
