காவிரியில் இருந்து நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு!

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் இன்று  நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிறகு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், “கடந்த மூன்று மாதங்களாகக் காவிரியில் இருந்து உரிய அளவில் நீரைக் கர்நாடக  அரசு திறந்துவிடப்படவில்லை. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக மாதாந்திர நீர்ப் பங்கீட்டு அட்டவணையின்படி தண்ணீர் வழங்கப்படவில்லை. எனவே காவிரியில் தற்போது உள்ள நீரையும் முறையாகப் பகிர்ந்தளிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. 

இதற்குக் கர்நாடக அரசு தரப்பில், “கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை. மழை மற்றும் நீர்வரத்து குறைவாக இருப்பதால் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவதில் சிரமம் உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இரு மாநிலங்களின் வாதங்களுக்கிடையே, தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,000 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அடுத்த ஆலோசனைக் கூட்டம் வரும் நவம்பர் மாதம் 6ஆம் தேதி நடைபெறும் என ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தெரிவித்துள்ளார்.