காவிரி ஆணைய முடிவை ஏற்ற அதிகாரிகள்; தமிழகத்திற்கு உரிய நீர் கிடைப்பதில் சிக்கல்

சென்னை: காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவை, தமிழக அதிகாரிகள் ஏற்றுக் கொண்டதால், தமிழகத்திற்கு உரிய நீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

‘தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி., நீரை, கர்நாடக அணைகளில் இருந்து திறக்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம், 2018 பிப்ரவரியில் தீர்ப்பு வழங்கியது. இந்த நீர் முறைப்படி கிடைப்பதை உறுதி செய்வதற்கு, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. அணைகளில் நீர் இருப்பு, நீர் திறப்பு உள்ளிட்ட தொழிற்நுட்ப விபரங்களை சேகரித்து, ஆணையத்திற்கு உதவுவதற்காக, காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவும் உருவாக்கப்பட்டது.

ஒவ்வொரு மாதமும் திறக்க வேண்டிய நீரின் அளவை, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. இரு மாநில எல்லையில் பிலிகுண்டுலு அருகே, நீரளவை தளத்தை, மத்திய நீர்வளத்துறை அமைத்து, நீர்வரத்தை கண்காணித்து வருகிறது. நீர் திறப்பை உறுதி செய்வதற்காக, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் நீர் முறைப்படுத்தும் குழுவை அவ்வப்போது கூட்ட வேண்டும்.

ஆனால், தமிழகத்திற்கு உரிய நீரை, கர்நாடகா திறப்பது கிடையாது. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டாலும், கர்நாடகா அரசு அலட்சியம் காட்டுவது வழக்கமாக உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின், 53வது கூட்டம், அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில், 23ம் தேதி டில்லியில் நடந்தது.

இதில், தமிழகத்தின் சார்பில், நீர்வளத்துறை செயலர் சத்யபிரதா சாஹு, காவிரி தொழில்நுட்ப குழுத் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, தமிழகத்திற்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வழங்க வேண்டிய நீரில், நிலுவையில் உள்ள, 24.8 டி.எம்.சி., நீரை விடுவிக்க வேண்டும் என, கேட்கப்பட்டது. ஆனால், கர்நாடகாவில் மழைப்பொழிவு மற்றும் நீர்வரத்தை ஒரு வாரம் கண்காணிக்கலாம், அதன்பின், மாநிலங்கள் முன்வைக்கும் கருத்துக்கள், நீரியல், வானிலை, சார்ந்த சூழ்நிலைகளை கருத்தில் வைத்து முடிவெடுக்கலாம். காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தை கூட்டி, மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நீரின் அளவை தீர்மானிக்கலாம் என்று ஆணையம் அறிவித்தது.

இதனால், சட்டப்படி தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய நீரை, பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு, தமிழக அதிகாரிகள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காதது, சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திற்கு சட்டப்படி உரிய நீர் கிடைப்பதிலும் சிக்கல் எழுந்துள்ளது.

உத்தரவை காற்றில் பறக்கவிடுகிறது

நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கர்நாடக அணைகளில், 48 டி.எம்.சி.,க்கு மேல், நீர் இருப்பு உள்ளது. இதில், தமிழகத்திற்கு சட்டப்படி வழங்க வேண்டிய நீரை விடுவிக்க, நாம் வலியுறுத்த வேண்டும். மழை நிலவரம், நீர்வரத்தை பார்த்துவிட்டு நீர் திறப்பதாக, காவிரி மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இதை தமிழக அதிகாரிகள் எப்படி ஏற்றுக் கொண்டனர் என்று தெரியவில்லை.
சட்டப்போராட்டம் நடத்தி பெற்ற தீர்ப்பை, செயல்படுத்த முடியாத, இக்கட்டான நிலை ஏற்பட்டு உள்ளது. காவிரி ஆணைய உத்தரவை, கர்நாடகா காற்றில் பறக்கவிடுவது வழக்கம். அத்துடன், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில் பிறப்பிக்கப்படும் உத்தரவை, கடந்த எட்டு ஆண்டுகளாக கர்நாடகா அரசு செயல்படுத்தியதே கிடையாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link