காவிரி டெல்டா வறட்சி: ஆகஸ்ட் 1-ல் திருவாரூரில் விவசாயிகள் மாநாடு

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சீர்காழி அருகே கொள்ளிடத்தில் மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் பங்கேற்றுப் பேசிய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது, காவிரி டெல்டா மாவட்டங்களில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டிருக்கிறது. சென்றாண்டு தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் 6.31 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், நடப்பாண்டு 2 லட்சம் ஏக்கருக்குள்ளாகவே சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சுமார் 12 லட்சம் ஏக்கர் பாலைவனமாகக் காட்சி அளிக்கிறது. கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், ஆறுகள், குளங்கள் மற்றும் குட்டைகள் வறண்டு கிடக்கின்றன. நிலத்தடி நீர் கீழே சென்றுள்ளதால், பல கிராமங்களில் ஆழ்குழாய் கிணறுகளை நம்பி சாகுபடி செய்த விவசாயிகள் பயிர்கள் கருகுவதைப் பார்த்து வேதனை அடைந்துள்ளனர். எல் நினோ தாக்குதலால் ஏற்பட்ட வறட்சி குறித்து விஞ்ஞானிகளோடு இணைந்து விவசாயிகள் சார்பில் வருகிற ஆகஸ்ட் 1ஆம் தேதி திருவாரூரில் வறட்சி மாநாடு நடத்தப்பட உள்ளது. இம்மாநாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க உள்ளனர்.

மேலும், கொள்ளிடம் தெற்கு கரையில் 20 கிலோமீட்டர் தூரம் சாலை மோசமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனைப் பேரிடர் மேலாண்மை திட்டத்தின்கீழ் விரைந்து செப்பனிட வேண்டுகிறோம். கொள்ளிடம் மற்றும் உப்பனாற்றில் கடல் நீர் உள்ளே வருவதைத் தடுப்பதற்குத் கதவணைகள் அமைப்பதற்குத் தமிழக அரசு முன்வர வேண்டும்.

காவிரியில் மேகதாட்டு அணை கட்டுமானம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தமிழக முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அதனை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் சென்று நடத்தும் பேச்சுவார்த்தை செல்லாது. அவ்வாறு நடத்துவது சட்டத்திற்குப் புறம்பானது மற்றும் நீதிமன்ற உத்தரவிற்கு முரணானது. அப்படி நடத்தப்படும் பேச்சுவார்த்தையால் எந்தப் பலனும் அளிக்காது. மாறாக, அது கர்நாடகாவில் இன கலவரத்தை உருவாக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தும்.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு மத்திய அரசால் கெஜட் வெளியிடப்பட்ட அன்று முதல், உச்ச நீதிமன்றத்தின் நேரடி கட்டுப்பாட்டில் கர்நாடகம், தமிழகத்தில் உள்ள காவிரி ஆறுகள் மற்றும் அணைகளில் உள்ள நீர் நிர்வாக முறைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. எனவே, மேகதாட்டு குறித்து தண்ணீர் பங்கிட்டுக் கொள்வது குறித்தோ சம்பந்தப்பட்ட மாநில முதலமைச்சர்கள் பேசுவது சட்டப்படி பயனளிக்காது.

கர்நாடக விவசாயிகள் மேகதாட்டு அணைக்கு எதிராக இருப்பதால் அங்கு போராட்டம் நடத்தும் வாய்ப்பு இல்லாத நிலையில், கன்னட இன உணர்வாளர்களை தூண்டிவிட்டு கலவரத்தை நடத்தும் முயற்சியில் மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை முதல் கர்நாடகாவில் தமிழக வாகனங்களை அனுமதிக்க மறுத்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த காலங்களில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாத நிலையில் கலவரங்கள் தூண்டப்பட்டு கர்நாடகத் தமிழர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதைத் தமிழக முதலமைச்சர் நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் தஞ்சை மண்டல செயலாளர் வேட்டங்குடி சீனிவாசன், கடலூர் மாவட்ட தலைவர் அன்பழகன், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட துணைச் செயலாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் விவசாயிகளும் பங்கேற்றனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்

Source link