காவிரி பிரச்சனை முதல் எல்லை சிக்கல் வரை: தென் மண்டல கவுன்சில் உறுப்பினர்களாக 2 அமைச்சர்கள் நியமனம்

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க அரசின் சார்பில், மாநிலங்களுக்கு இடையேயான தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்கான குழு அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான இந்தக் குழுவில், சட்டத்துறை அமைச்சர் சி.டி. நிர்மல் குமார் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், மாநில அரசு நிர்வாகத்தின் சார்பில் தலைமைச் செயலாளர் சாய்குமாரும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அவ்வப்போது நடத்தப்படும் இந்தச் தென் மண்டல கவுன்சில் அமைப்பில், தமிழகம் உட்பட கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் அந்தமான்-நிக்கோபார் தீவுகள் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களும், அரசுத் தலைமைச் செயலாளர்களும் பங்கேற்பது வழக்கமாகும்.

மாநிலங்களுக்கு இடையே நிலவும் எல்லைப் பிரச்சனைகள், நதிநீர் பங்கீடு, உள்கட்டமைப்பு மேம்பாடு, போக்குவரத்துத் தொடர்பு, பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சிறுபான்மையினரின் நலன்கள் போன்ற பொதுவான சிக்கல்கள் குறித்து விவாதித்து சுமூகத் தீர்வு காண்பதே இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

அந்த வகையில், விரைவில் நடைபெறவுள்ள தென் மாநில முதல்வர்களுக்கான கவுன்சில் கூட்டத்தில், காவிரி நதிநீர் பிரச்சனை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய வாழ்வாதாரக் கோரிக்கைகளை அழுத்தமாக முன்வைத்து விவாதிக்கத் தமிழக அரசு விரிவான திட்டமிடுதலுடன் ஆயத்தமாகி வருகிறது.

Source link