ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் திடீர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கனமழையால் திடீர் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டது. நூனாபந்தி கிராமத்தில் வீடு இடிந்து விழுந்ததில் 28 வயதான நசியா என்ற பெண் உயிரிழந்தார். அவரது கணவர் முகமது ஹபீஸ் மற்றும் அவரது மூன்று பிள்ளைகள் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மர்ஹோட்டேவில் உள்ள ஒரு ஓடையில் சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வெள்ளப்பெருக்கில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் நான்கு பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காணாமல் போயினர். ரஜோரியிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வரும் ஜூலை 23ம் தேதி வரை கனமழை கொட்டி தீர்க்கும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
மழை தொடரும் என்பதால் அங்கு மீட்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அடுத்த சில நாட்களுக்கு ஜம்மு காஷ்மீர் முழுவதும் பரவலான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதையடுத்து, அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
