புதுடில்லி: ஜம்மு – காஷ்மீர் விவகாரம் குறித்து இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஓ.ஐ.சி.,) தெரிவித்த கருத்துகளுக்கு மத்திய வெளியுறவு துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அக். 17, 18ம் தேதிகளில் நடந்த ஓ.ஐ.சி., வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், ஜம்மு – காஷ்மீரில் ‘மனித உரிமைகள் மற்றும் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருகிறது’ என கருத்து தெரிவித்திருந்தனர். இதற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:
ஓ.ஐ.சி., கருத்து உள்நோக்கம் கொண்டது; பாகிஸ்தானின் தூண்டுதலின் பேரில் இத்தகைய கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள்.
அரசியலமைப்பின் 370வது பிரிவு நீக்கிய பின், ஜம்மு – காஷ்மீரில் உள்கட்டமைப்பு, சுற்றுலா மற்றும் போக்குவரத்து வசதிகள் அதிகரித்தது மட்டுமல்லாமல், பொருளாதார வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்களுக்கு எதிராக வன்முறைகளும் அடக்குமுறைகளும் நிகழ்த்தப்படுகிறது. அங்கு போராட்டங்களில் ஈடுபட்ட பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்டு உள்ளனர். ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகளால் அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களை மறைக்க முடியாது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகளை அந்நாடு காலி செய்ய வேண்டும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும். இவையே ஜம்மு – காஷ்மீர் தொடர்பாக தீர்க்கப்பட வேண்டிய முக்கிய பிரச்னைகள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
