சென்னை டி.ஜி.எஸ். தினகரன் பாதையில் அமையவிருக்கும் புதிய முதலமைச்சர் முகாம் அலுவலகத்தின் புதுப்பித்தல் மற்றும் அமைப்புப் பணிகளை விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சரின் அன்றாடப் பணிகள் மற்றும் முக்கியமான கலந்தாலோசனைகள் எந்தவிதத் தடங்கலும் இன்றி நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில், நவீன வசதிகளுடன் கூடிய இந்த அலுவலகம் தயாராகி வருகிறது. இந்த ஆய்வின் போது, உள்கட்டமைப்பு வசதிகள், பாதுகாப்பு நடைமுறைகள், அறைகளின் வடிவமைப்பு மற்றும் கட்டடப் பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் அவர் விரிவாகக் கேட்டறிந்தார்.
மேலும், அலுவலகத்தின் அனைத்துப் பணிகளையும் உயர் தரத்துடன், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விரைந்து முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். இந்த நிகழ்வில் பொதுப்பணித்துறையின் தலைமை அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தற்போது முதலமைச்சர் விஜய் நீலாங்கரையில் அமைந்துள்ள தனது சொந்த இல்லத்தில் இருந்தே தலைமைச் செயலகத்திற்கு நாள்தோறும் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நீண்ட பயணத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைச் சிரமங்களைத் தவிர்க்கும் பொருட்டு, தலைமைச் செயலகத்திற்கு மிக அருகில் உள்ள இடத்தைத் தேர்வு செய்து, அதை அதிகாரப்பூர்வ முகாம் அலுவலகமாகவும் இல்லமாகவும் மாற்றும் முயற்சிகளில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை ஈடுபட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, சென்னை பசுமைவழிச் சாலையில் அமைந்துள்ள ‘பாமணி’ இல்லத்தை முதலமைச்சரின் முகாம் அலுவலகமாக மாற்றுவதற்கான முதற்கட்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பட்டினப்பாக்கத்தில் முதலமைச்சருக்கு ஏற்கனவே ஒரு இல்லம் உள்ள சூழலில், அதற்கு மிக பக்கத்தில் இந்த பாமணி இல்லம் அமைந்துள்ளது. முன்னதாக, முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் தங்கியிருந்த இந்த இல்லத்தில் அமைச்சர்கள் விக்னேஷ், வினோத் ஆகியோரின் வீடுகளும் அருகில் உள்ளன. இந்த பாமணி இல்லத்தையும் முதலமைச்சர் விஜய் விரைவில் நேரில் சென்று ஆய்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், முதலமைச்சர் விஜய் இந்த இல்லத்திற்கு மாறிய பிறகு, ‘பாமணி இல்லம்’ என்ற பெயரை ‘வெற்றி வீடு’ என்று பெயர் மாற்றம் செய்வது குறித்தும் பொதுப்பணித்துறை ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை அரசிடமிருந்து வெளியாகவில்லை.
