குஜராத்தை தொடர்ந்து மிரட்டும் கனமழை 2 நாட்களில் 35 பேர் பலி; மீட்புப் பணி தீவிரம்

ஆமதாபாத்: குஜராத்தில் கனமழைக்கு கடந்த இரண்டு நாட்களில் 35 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் துரித கதியில் நடந்து வருகின்றன.

பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, குஜராத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள வல்சாத், சூரத், படான், வாவ்தரத் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது பெய்து வரும் மழையால் முக்கிய ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி, நகரங்கள் மூழ்கின. சாலைகள், குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

இரு நாட்களாக கொட்டி வரும் மழையால் படான், வாவ்தராத், கேடா, வல்சாத், நவ்சாரி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக சந்தல்பூரில் 38 செ.மீ., மழையும், ராதன்பூரில் 34 செ.மீ., மழையும் பதிவானது. நேற்று காலை 6:00 மணி வரையிலான நிலவரப்படி, 34 மாவட்டங்களில், 173 இடங்களில் 25 செ.மீ.,க்கும் அதிகமான மழை பதிவானதாக மாநில அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த இரு நாட்களில், கனமழைக்கு 35 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மிக மோசமாக பாதிக்கப்பட்ட நவ்சாரி, வல்சாத் மாவட்டங்களில் மட்டும் 29 பேர் பலியாகியுள்ளனர். இதில், பெரும்பாலான உயிரிழப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாலேயே ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 7,000க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 18 குழுக்களும், மாநில பேரிடர் மீட்பு படையின் 32 குழுக்களும், ராணுவம், கடலோர காவல் படை மற்றும் உள்ளூர் நீச்சல் வீரர்கள் குழுக்களும் ஈடுபட்டுள்ளன. ஆமதாபாத், சூரத் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை சற்று ஓய்ந்துள்ள நிலையில், நிவாரணப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கிடையே, குஜராத்தில் இன்று முதல் படிப்படியாக மழையின் தாக்கம் குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், வாவ்தராத், பனஸ்கந்தா, சபர்கந்தா, மெஹ்சானா, பாவ்நகர் ஆகிய பகுதிகளுக்கு இன்று கனமழைக்கான ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

Source link