குஜராத் ‛கில்லி' சுப்மன் கில் * கொல்கட்டா அணியை வீழ்த்தியது

ஆமதாபாத்: சுப்மன் கில் விளாசல் கைகொடுக்க, குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கட்டாவை வீழ்த்தியது.

வருடம் தோறும் கிரிக்கெட் லீக் தொடர் நடக்கிறது. நேற்று ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் கொல்கட்டா, குஜராத் அணிகள் மோதின. 5 போட்டியில் ஒரு வெற்றியும் (4 தோல்வி, 1 ரத்து) பெறாத ஏக்கத்தில் இருந்த கொல்கட்டா அணி கேப்டன் ரகானே, ‘டாஸ்’ வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

ரகானே ஏமாற்றம்

கொல்கட்டா அணிக்கு ரகானே, செய்பெர்ட் ஜோடி துவக்கம் தந்தது. முகமது சிராஜ் வீசிய முதல் ஓவரில், ரகானே ‘டக்’ அவுட்டானார். ரபாடா வீசிய 2வது ஓவரின் கடைசி பந்தில், ரகுவன்ஷி (8) அவுட்டானார். மீண்டும் வந்த ரபாடா, இம்முறை செய்பெர்ட்டை (19) வெளியேற்றினார்.

கிரீன் நம்பிக்கை

பிரசித், ரஷித் கான் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார் கேமரான் கிரீன். பாவெல், 27 ரன்னில் (20 பந்து), அசோக் சர்மா பந்தில் அவுட்டானார். கிரீன் 27 ரன் எடுத்த போது, ரஷித் கான் ‘சுழலில்’ எல்.பி.டபிள்யு., அவுட்டில் இருந்து தப்பினார்.

அசோக் சர்மா வீசிய 13 வது ஓவரில் இரண்டு சிக்சர் விளாசிய கிரீன், இத்தொடரில் முதல் அரைசதம் (34 பந்து) கடந்தார். தொடர்ந்து அசத்திய இவர், ரஷித் கான் ஓவரில் (14வது) தொடர்ந்து 6, 4, 4 என அடித்து மிரட்டினார். 9 ஓவரில் 69/3 என இருந்த கொல்கட்டா, அடுத்த 48 பந்தில் 96 ரன் எடுத்தது (17 ஓவர், 165/7).

அனுகுல் ராய் (9), ரிங்கு சிங் (1), ராமன்தீவ் (17) நிலைக்கவில்லை. சிராஜ் ‘வேகத்தில்’ நரைன் ‘டக்’ அவுட்டானார். கடைசி 3 ஓவர்களை, குஜராத் பவுலர்கள் துல்லியமாக வீச, கொல்கட்டா அணி 15 ரன் மட்டும் எடுத்தது. கிரீன் 79 ரன்னில் (55 பந்து), ரஷித் ‘சுழலில்’ வீழ்ந்தார். 20 ஓவரில் கொல்கட்டா அணி 180 ரன்னில் ஆல் அவுட்டானது.

சுப்மன் ‘சூப்பர்’

குஜராத் அணிக்கு சாய் சுதர்சன், கேப்டன் சுப்மன் கில் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. 5.1 ஓவரில் 57 ரன் சேர்த்த போது சுதர்சன் (22) அவுட்டானார். வருண் சக்ரவர்த்தி ‘சுழலில்’ பட்லர் (25) சிக்கினார். இத்தொடரில் வருண் கைப்பற்றிய முதல் விக்கெட் இது.

மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த சுப்மன், 27 பந்தில் அரைசதம் அடித்தார். மீண்டும் அசத்திய வருண், வாஷிங்டனை (13) திருப்பி அனுப்பினார்.

50 பந்தில் 86 ரன் எடுத்த சுப்மன், வைபவ் பந்தில் அவுட்டானார். கடைசி ஓவரில் குஜராத் வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட்டன. முதல் பந்தில் பிலிப்ஸ் (19) அவுட்டான போதும், குஜராத் அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு, 181 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

பட்லர் ‘300’

நேற்று கொல்கட்டாவின் ரகுவன்ஷியை ‘கேட்ச்’ செய்தார் குஜராத் விக்கெட் கீப்பர் பட்லர். இது ‘டி-20’ அரங்கில் 300 வது ‘கேட்ச்’ ஆனது.

* அதிக ‘கேட்ச்’ செய்த வீரர்களில் பட்லர் நான்காவது இடம் பெற்றார். முதல் மூன்று இடத்தில் போலார்டு (405), மில்லர் (332), குயின்டன் டி காக் (316) உள்ளனர். பிராவோ (275), ஐந்தாவதாக உள்ளார்.

முதல் அரைசதம்

கொல்கட்டா அணி சார்பில் ரூ.25.20 கோடிக்கு வாங்கப்பட்டவர் ‘ஆல் ரவுண்டர்’ கேமரான் கிரீன். அதிக தொகைக்கு ஏலம் போன அன்னிய வீரரான (2வது இடம் ஸ்டார்க், ரூ. 24.75 கோடி, ஆஸி.,) இவர், முதல் 5 போட்டியில் 18, 2, 4, 32, 0 என ஏமாற்றினார். நேற்று முதன் முறையாக 79 ரன் எடுத்து ஆறுதல் தந்தார்.


தொடரும் சோகம்

கொல்கட்டா அணி கேப்டன் ரகானே, முதல் போட்டியில் 67 ரன் (மும்பை) எடுத்தார். அடுத்த 5 போட்டியில் 8, 8, 41, 28, 0 என ஏமாற்றினார். இதேபோல ரிங்கு சிங்கும் 6 போட்டியில் (33, 35, -, 4, 6, 1) என 79 ரன் மட்டும் எடுத்துள்ளார்.

Source link