தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 17ஆம் தேதி (17.10.2026) சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கத்தில் திமுக எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், எஸ்.ஐ.ஆருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில், மற்ற இரு தேர்தல் ஆணையர்களின் எதிர்ப்பையும் மீறி, எஸ்.ஐ.ஆரில் நடைமுறையில் அநீதியை முன்னின்று நடத்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவிநீக்கம் செய்யப்பட்டு, உரிய விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதோடு அனைத்து மாநிலங்களிலும் அவசரகதியாக நடத்தப்பட்ட எஸ்.ஐ.ஆரை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனவும், எஸ்.ஐ.ஆருக்கு முந்தைய வாக்காளர் பட்டியலைக் கொண்டே இனி வரும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக, பழையபடி வாக்குச்சீட்டு முறையில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதோடு இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி குடியரசுத் தலைவரிடம் திமுக எம்.பிக்கள் மனு அளிக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து, ஞானேஷ் குமாரை பதவி நீக்க கோரி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு திமுக எம்.பிக்கள் மின்னஞ்சல் மூலமாக மனு அளித்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “97 இலட்சம் வாக்காளர்கள் பட்டியலில் ஏன் இல்லை?. வாக்காளர் நீக்கங்கள் தேர்தல் முடிவுகளை மாற்றியதா?. தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை எங்கே?. இவை வெறும் கேள்விகளல்ல; ஜனநாயகத்தின் அடித்தளத்தையே உலுக்கும் குற்றச்சாட்டுகள்!. ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்ய நடவடிக்கை. எஸ்.ஐ.ஆர். ரத்து. மீண்டும் வாக்குச்சீட்டு முறை உள்ளிட்ட கோரிக்கைகளுடன் குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பியுள்ளேன்.
வாக்குரிமை என்பது சலுகையல்ல; அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமை. ஒவ்வொரு வாக்கும் கணக்கில் வர வேண்டும். ஒவ்வொரு வாக்காளரின் உரிமையும் காக்கப்பட வேண்டும். நமது கேள்விகளுக்குப் பதில் வேண்டும்! ஜனநாயகத்திற்கு நீதி வேண்டும்!
குடியரசுத் தலைவரிடம் முன்வைத்த 9 கோரிக்கைகள் :
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்ய நாடாளுமன்ற நடவடிக்கை. தேர்தல் ஆணையத்தில் தனிநபர் ஆதிக்கத்தைத் தடுத்து, கூட்டு முடிவெடுக்கும் முறையை உறுதிசெய்க. தமிழ்நாட்டில் 97 இலட்சம் வாக்காளர்கள் வரைவுப் பட்டியலில் இடம்பெறாதது மற்றும் தேர்தல் முடிவுகளில் அதன் தாக்கம் குறித்து உச்சநீதிமன்றக் கருத்தைப் பெறுக!
எஸ்.ஐ.ஆருக்குப் பிந்தைய வாக்காளர் பட்டியலை எதிர்காலத் தேர்தல்களில் பயன்படுத்தாதீர்! நாடு முழுவதும் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை இரத்து செய்க. இ.சி.ஐ. நெட் (ECINET), இ.ஆர்.ஓ. நெட் (ERONET) தேர்தல் ஆணையம் சாராத வல்லுநர்களைக் கொண்டு தடயவியல் ஆய்வு நடத்துக. தேர்தல் ஆணையத்தின் பெரும்பான்மை ஒப்புதலின்றி எடுக்கப்பட்ட முடிவுகளின் சட்டப்பூர்வத்தன்மை குறித்து உச்சநீதிமன்றக் கருத்தைப் பெறுக!. வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவருக! அதுவரை 100% வி.வி.பேட் (VVPAT) எண்ணிக்கையை உறுதிசெய்க. குடிமக்கள் ஒவ்வொருவரின் வாக்குரிமையையும் பாதுகாக்கத் தேவையான அரசியலமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்க” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
