குன்னுார்: நீலகிரி மாவட்டம், குன்னுாரில், அக்., 23ல் கொட்டி தீர்த்த கன மழையால், பர்லியார் மலை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. பேரிடரில், அரசு பஸ் டிரைவர் ஜனகராஜ் உயிரிழந்த பர்லியார் உட்பட அனைத்து பகுதிகளிலும், உத்தரகாண்ட் மாநில நிலச்சரிவு தடுப்பு தொழில்நுட்ப நிபுணர் பல்ராஜ் சிங், நெடுஞ்சாலை துறை கோவை கோட்ட பொறியாளர் சங்கர் அடங்கிய குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
பல்ராஜ் சிங் கூறுகையில், ‘‘நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் சாலையின் அகலம் குறைவு. மலை பக்கத்தை விட பள்ளத்தாக்கு பக்கம் மிகவும் ஆபத்தாக உள்ளது. அங்கு மணல் மூட்டைகளை அடுக்குவது பாதுகாப்பிற்கு உகந்ததல்ல. அதற்கு பதில், மலை பக்கத்தில், பொக்லைன் மூலம், 3 மீ., அளவுக்கு மலையை குடைந்து, சாலையை அகலப்படுத்த வேண்டும்.
‘தாழ்வான இடத்தில் உறுதியான தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். இலகுரக வாகனங்களை மட்டும் இயக்கலாம். மலைச்சரிவிலிருந்து பாறைகள் உருண்டு விழுவதை தடுக்க, இரண்டு அடுக்கு பாதுகாப்பு வலைகளை பொருத்த வேண்டும்,’’ என்றார்.
