உலகளவில் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது உள்கட்டமைப்பை அதிவேகமாக விரிவுபடுத்தி வருகிறது. இதன் முக்கிய அங்கமாகத் தமிழகத்தின் குலசேகரப்பட்டினத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய விண்வெளி மையம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனுடன் தனியார் பங்களிப்பையும் இணைத்து விண்வெளித் துறையில் இந்தியா புதிய சகாப்தத்தைப் படைக்கத் திட்டமிட்டுள்ளது.
இஸ்ரோ தனது விண்வெளிப் பணிகளைப் பெரிய அளவில் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வரும் 2029-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் மொத்தம் நான்கு ஏவுதளங்கள் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரும் என்று இஸ்ரோ தலைவர் டாக்டர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார்.
சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய இஸ்ரோ தலைவர்,வி.நாராயணன் இந்தியாவின் வருங்கால விண்வெளித் திட்டங்கள் குறித்தும், அதில் தனியார் துறையின் பங்களிப்பு குறித்தும் விரிவாகப் பேசினார்.
உலகளாவிய செயற்கைக்கோள் ஏவுதல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் 2,000 ஏக்கர் பரப்பளவில் சிறிய செயற்கைக்கோள் ஏவு வாகனத்திற்கான (எஸ்.எஸ்.எல்.வி) தனி வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய விண்வெளி மையத்தில் ஒருங்கிணைப்பு கட்டடங்கள், ஏவுதளங்கள், இரயில் பாதை அமைப்புகள், தொலைவிலகு அளவியல் (Telemetry), கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் போன்ற மிக முக்கிய உள்கட்டமைப்பு வசதிகள் இடம்பெறும் என்று அவர் குறிப்பிட்டார்.
தேசிய விண்வெளி முகமையான இஸ்ரோ எக்காரணம் கொண்டும் தனியார்மயமாக்கப்படாது என்று தெளிவுபடுத்திய வி.நாராயணன், அதேவேளையில் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களுக்கான உலகளாவிய மற்றும் உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தனியார் நிறுவனங்களுடன் கைகோர்ப்பது அவசியமானது என்றார். விண்வெளி அமைப்பை விரிவுபடுத்த புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களுக்கு இஸ்ரோ தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வழிநடத்தும். இதன் மூலம் பொருளாதார வளர்ச்சி அடைவதோடு, ஆயிரக்கணக்கான உயர் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், இன்னும் இரண்டு மாதங்களுக்குள் ககன்யான் திட்டத்தின் முதல் மனிதனில்லா சோதனையை நடத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது என்றார். மனிதர்கள் பயணிக்கும் முதன்மைப் பணிக்கு முன்னதாக, மொத்தம் மூன்று மனிதனில்லா சோதனை விண்கலன்கள் ஏவப்படும். இந்த சோதனைகளின் போது விண்கலத்தின் சுற்றுச்சூழல் கட்டுப்பாடு, பாதுகாப்பு அமைப்புகள், அவசர காலத்தில் வீரர்கள் தப்பிக்கும் வழிமுறைகள் மற்றும் மாறுபட்ட அழுத்தம், வெப்பநிலை, ஈரப்பதத்தின் கீழ் தொகுதியின் உள்பகுதி செயல்பாடுகள் போன்றவை தீவிரமாக மதிப்பீடு செய்யப்படும்.
ககன்யான் திட்டத்திற்காக இதுவரை சுமார் 8,000 தரைவழிச் சோதனைகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு விண்வெளி வீரர்களுக்கும் தற்போது சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், நிலவை ஆராய்ச்சி செய்யும் சந்திரயான்-5 திட்டம் குறித்த தகவலையும் அவர் பகிர்ந்துகொண்டார். சந்திரயான்-5 திட்டம் ஜப்பான் விண்வெளி முகமையுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் கூட்டு முயற்சியாகும். இதில் 350 கிலோ எடைகொண்ட ரோவர் நிலவின் மேற்பரப்பிற்கு அனுப்பப்பட்டு, சுமார் 100 நாட்களுக்குப் பல்வேறு அறிவியல் ஆய்வுகள் மற்றும் பரிசோதனைகள் நடத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார்.
