– நமது சிறப்பு நிருபர் –
குழந்தைகளுக்கான பாக்கெட் உணவுகளில் அதன் முன்பக்கம் சர்க்கரை அளவை தெளிவாக குறிப்பிடுவதற்கான, ஊட்டச்சத்து குறியீட்டு விதிகளை விரைவாக அமல்படுத்தும்படி, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துக்கு, நுகர்வோர் விவகாரங்களுக்கான பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.
பாக்கெட் உணவுகளில் குறிப்பாக குழந்தைகளுக்கான பாக்கெட் உணவுகளில் சர்க்கரை அளவு அதிகம் இருப்பதாக டாக்டர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றனர். ஆனால், பாக்கெட் உணவில் எவ்வளவு சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது என்பதை நுகர்வோர் எளிதில் அறியும் வகையில், தற்போது எளிமையான முன்பக்க தகவல் முறை இல்லை.
அவசியம்
இந்நிலையில், தி.மு.க., – எம்.பி., கனிமொழி தலைமையிலான நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகத் துறைக்கான பார்லி., நிலைக்குழு, ‘பாக்கெட் உணவில் உள்ள சர்க்கரை அளவு குறித்து நுகர்வோருக்கு தெளிவான தகவல் கிடைப்பது அவசியம்’ என வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக பார்லி., குழு எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,க்கு வழங்கிய பரிந்துரை: பாக்கெட் உணவுகளில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது என்பது, அனுமதிக்கப்பட்ட வரம்பை நிர்ணயிப்பதோடு மட்டும் நின்றுவிடக் கூடாது.
நுகர்வோருக்கு தெளிவான தகவல் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். உலக சுகாதார நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரைகளின் படி, பாக்கெட் உணவுகளில் சர்க்கரை அளவை கட்டாயமாக வகைப்படுத்த வேண்டும்.
அனைத்து பாக்கெட் உணவுகளிலும், மொத்த சர்க்கரை மற்றும் சேர்க்கப்பட்ட சர்க்கரை அளவை தனித்தனியாக குறிப்பிடுவதை கட்டாயமாக்க வேண்டும்.
தாமதம்
குழந்தைகளுக்கான உணவுகளில், ‘சர்விங் சைஸ்’ எனப்படும், ஒரு முறை பரிமாறப்படும் உணவு அளவில் சேர்க்கப்பட்ட சர்க்கரை எத்தனை கிராம் என்பதையும், அது அந்த வயதினரின் தினசரி ஆற்றல் தேவையில் எவ்வளவு சதவீதம் என்பதையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
உணவு பாக்கெட்டின் முன்பக்கத்தில், சர்க்கரை அளவை சிவப்பு, மஞ்சள், பச்சை என மூன்று நிறக் குறியீடுகள் அல்லது அதிக சர்க்கரை உள்ள பொருட்களுக்கு எச்சரிக்கை குறியீடு மூலம் நுகர்வோருக்கு எளிதில் புரியும் வகையில் காட்ட வேண்டும்.
கடந்த 2022ல் வெளியிடப்பட்ட முன்பக்க ஊட்டச்சத்து குறியீடுக்கான வரைவு விதிகளை, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகியும் இறுதி செய்யவில்லை. இந்த தாமதத்தை தவிர்த்து, விரைவில் அந்த விதிகளை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
