-நமது நிருபர்-
மஹாராஷ்டிரா மாநிலத்திலிருந்து, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் கம்பெனிக்கு இரும்பு பொருள் ஏற்றிக்கொண்டு, மஹாராஷ்டிரா பதிவு எண் கொண்ட கனரக லாரி வந்து கொண்டிருந்தது.
திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் அருகே இன்று (அக்.,23) காலை வந்தபோது, ஸ்ரீபெரும்புதுார் செல்ல வேண்டிய நெடுஞ்சாலையில் திரும்புவதற்கு பதிலாக, லாரி ஓட்டுநர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் திரும்பி சென்று கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென செல்லும் வழி சரிதானா என சந்கேமடைந்த ஓட்டுநர், ‘கூகுள் மேப்’ மூலம் ஸ்ரீபெரும்புதுார் செல்லும் வழியை பார்வையிட்டார்.
அப்போது, ‘வெங்கத்துார் வழியாக செல்லலாம்’ என, கூகுள் மேப் வழிகாட்டவே, அதிவேகமாக வெங்கத்துார் பகுதியில் உள்ள வளைவில் திரும்பினார். அதனால், நிலைதடுமாறிய லாரி, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், லாரியை ஓட்டி வந்த மஹாராஷ்டிராவைச் சேர்ந்த டிரைவர் ராம்தேவ், 30, கிளீனர் ஆகிய இருவரும், அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். விபத்து குறித்து வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
