-நமது நிருபர்-
‘நீட்’ தேர்வு குளறுபடிகளுக்கு எதிரான போராட்டத்தில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கைது செய்யப்பட்டதை கண்டிக்காமல், திமுக தலைவர் ஸ்டாலின் மவுனம் காத்தது, பேசு பொருளாகி உள்ளது.
‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, டில்லியில் பிரதமர் இல்லம் நோக்கி, எதிர்க்கட்சியினர் பேரணி நடத்தினர். பிரதமர் இல்லம் அருகில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ராகுலை, டில்லி போலீசார், குண்டுக்கட்டாக துாக்கிச் சென்று கைது செய்தனர்.வழக்கமாக, காங்கிரஸ் மற்றும் ராகுலுக்கு எதிராக, மத்திய பாஜ அரசு நடவடிக்கை எடுத்தால், முதலில் கண்டனம் தெரிவிப்பது திமுக வழக்கம். தமிழக சட்டசபை தேர்தலுக்கு பின், திமுக கூட்டணியில் இருந்து, காங்கிரஸ் விலகியதோடு, தவெக அரசை ஆதரித்து, அமைச்சரவையிலும் இடம்பெற்று விட்டது.
‘இண்டி’ கூட்டணியில் திமுக இருக்கிறதா, இல்லையா என்பதை, அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் அறிவிக்கவில்லை. ஆனால், ‘மாநில நலனுக்காகவும், உரிமைக்காகவும், டில்லியில் திமுக தனித்து போராடும்’ என, ஸ்டாலின் அறிவித்து விட்டார். எனவே, ராகுல் கைது செய்யப்பட்டதற்கு, ஸ்டாலின் மற்றும் திமுக எம்பி,க்கள் யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை.
அதே நேரத்தில், ராகுல் கைதுக்கு முதல்வர் விஜய் கண்டனம் தெரிவித்தார். தமிழகத்தில் கூட்டணி இல்லாவிட்டாலும், தேசிய அளவில் பாஜவை எதிர்க்க, திமுகவுடன் இணைந்து செயல்பட, காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால், தவெகவுடன் கூட்டணி அமைத்த கோபத்தில், தேசிய அரசியலில் திமுக தனித்து செயல்பட்டு வருவதாக விமர்சனம் எழுந்துள்ளது.
