“கூட்டணி மாறியதால் அரசின் முடிவில் மாற்றம்”; பேசுபொருளாக மாறிய யூசப் பதான் விவகாரம்

தேசிய ஜனநாயக (பாஜக) கூட்டணியில்  சேர்ந்த சில மாதங்களிலேயே யூசுப் பதானுக்கு நிலம் வழங்கப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

கிரிக்கெட் வீரர் யூசுப் பதான், கடந்த 2012  ஆம் ஆண்டு முதல் குஜராத்தின் வதோதராவில் டான்டல்ஜா பகுதியில், தனது வீட்டிற்கு அருகில் உள்ள 978 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட சர்ச்சைக்குரிய நிலத்தை தனக்கு ஒதுக்கக் கோரிவருகிறார். கடந்த 14 ஆண்டுகளாக அரசிடம் கோரிக்கை வைத்தும் எந்தவித பலனும் இல்லை. இந்த விவகாரத்தில், நில ஆக்கிரமிப்பு தொடர்பாகக் குஜராத் உயர் நீதிமன்றத்திலும் சட்டப்போராட்டங்கள் நடந்துள்ளன. இருப்பினும், எந்த முடிவும் எட்டப்படவில்லை.  

இந்நிலையில், கடந்த 14 ஆண்டாக இழுத்தடிக்கப்பட்ட இந்த விவகாரத்தில் தற்போது வதோதரா மாநகராட்சிக்கு மாநில பாஜக அரசு உரிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, சர்ச்சைக்குரிய நிலத்தில் 500 சதுர மீட்டர், வீடு கட்டும் பயன்பாட்டிற்காக யூசுப் பதானுக்கு இலவசமாக வழங்கக் குஜராத் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மீதமுள்ள 478 சதுர மீட்டர் நிலம் 55 சதவீதம் சலுகை விலையில் அவருக்கே வழங்கப்பட உள்ளது. விரைவில் மாநகராட்சியின் நிலைக்குழுவின் இறுதி ஒப்புதல் பெறப்பட்டு, அவரிடம் நிலம் ஒப்படைக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.  

மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில்,  கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் யூசப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் நிலவியது. இந்நிலையில், அக்கட்சியிலிருந்து விலகி 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். அதில், யூசப் பதானும் ஒருவராவார். இதையடுத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த சில மாதங்களிலேயே யூசுப் பதானுக்கு இந்த நிலம் ஒதுக்கீடு செய்யப்படுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.