நாடு முழுவதும் இந்து மக்களால் 9 நாள் நவராத்திரி வழிபாட்டிற்குப் பிறகு 10வது நாள் விஜயதசமி விழா வெகு விமர்சையாக கொண்டாப்படும். குறிப்பாக வடமாநிலங்களில் நவராத்திரியின் 9 நாளும், நடனம், வகைவகையான உணவு பரிமாறுதல், புத்தாடைகள் என விதவிதமாக மக்கள் கொண்டாடுவார்கள். அதனைத் தொடர்ந்து 10வது நாள் விஜயதசமியை தசரா எனக் துர்கா அம்மனை வழிபட்டு கொண்டாடுவார்கள்.
அந்த வகையில் நவராத்திரி விழாவை ஒட்டி, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் மையப்பகுதியில் உள்ள முக்தாராம் பாபு தெருவில் அமைந்துள்ள சர்போஜனின் பூஜா பந்தலில் துர்க்கை பூஜை இன்று (17-10-26) நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி அந்த பந்தலில் அமைக்கப்பட்டிருந்த துர்கை தேவியின் சிலைக்கு பூஜை செய்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென மழை பெய்யத் தொடங்கியதால், அங்கு வந்திருந்த மக்கள் நிலைகுலைந்தனர். குறுகிய பாதைகளைக் கொண்ட அந்த இடத்தில், பந்தலுக்கு வெளியே இருந்த பலர் மழையிலிருந்து தப்பிக்க உள்ளே நுழைய முயன்றனர்.
இதனால், பந்தலுக்குள் இருந்தவர்களால் வெளியே வர முடியாமலும், வெளியே சிக்கியவர்கள் உள்ளே நுழைய முண்டியடித்ததாலும், மக்கள் ஒருவருக்கொருவர் மீது விழுந்து கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் சிக்கி சுமார் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சுமார் 25 முதல் 30 பேர் வரை காயமடைந்து அருகில் உள்ள கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டு வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.
