புதுடில்லி: மத்திய அரசின் கேபினட் செயலராக உள்ள தமிழகத்தைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி டி.வி.சோமநாதன், ஆகஸ்ட் இறுதியில் ஓய்வு பெறுகிறார். அதற்கு முன், ஒரு நல்ல விஷயத்தை செய்துள்ளார் அவர். அனைத்து மாநில செயலர்களுக்கும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என, ஒரு விலாவாரியான பட்டியலை, கடிதம் வாயிலாக எழுதி சொல்லியிருக்கிறார்.
அதில் முக்கியமான ஒன்று, ஆலோசனை கூட்டங்களை எப்படி நடத்துவது, எவ்வளவு நேரம் இந்த கூட்டம் நடக்கலாம் என கூறியுள்ளார். ‘எந்த ஒரு கூட்டமும் அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை மட்டுமே நடத்த வேண்டும்; பல ஆலோசனை கூட்டங்கள் தாமதமாக துவங்கி, நெடுநேரம் வரை நடக்கின்றன; இதனால் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், தங்கள் துறைகளின் வேலைகளை செய்ய முடியாமல் போய் விடுகிறது…
‘அத்துடன், இந்த கூட்டங்களில் எந்தவித முடிவுகளும் எடுப்பதும் இல்லை. அரசு நிர்வாகத்தை எப்படி ஒழுங்காக நடத்த வேண்டும்’ என்பதற்கான அறிவுரைகளை இந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார் சோமநாதன்.
இந்தாண்டு நாடு முழுதும், 300 மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும், பல மாநில தலைமை செயலர்களும் ஓய்வு பெறுகின்றனர். உ.பி.,யில் மட்டும், 30க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஓய்வு பெறுகின்றனர். புதிதாக பதவியேற்கும் அதிகாரிகளுக்கு வசதியாக, இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார் சோமநாதன்.
இவர், பிரதமர் மோடிக்கு நெருக்கம். நிதித்துறை செயலராக இருந்த இவரை, கேபினட் செயலராக்கினார் மோடி. எனவே, இவருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாக, டில்லி அதிகாரிகள் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
