சென்னை: கேரளாவில், தலைமைச் செயலகம், கவர்னர் மாளிகை உள்ளிட்ட, அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த, தமிழக பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரத் சுப்பிரமணியன், மென் பொறியாளர். இவர், அமெரிக்காவில், 16 ஆண்டுகளுக்கு மேல் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.
‘டார்க் வெப்’ என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கடந்த சில ஆண்டுகளாக, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள, பள்ளி, கல்லுாரிகள், விமான நிலையங்கள், அரசு அலுவலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்தார்.
இவரை, கடந்த ஜூலையில், தமிழக காவல் துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், சென்னை விமான நிலையத்தில் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
கேரள தலைமை செயலகம், கவர்னர் மாளிகை, கேரள முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமான ‘கிளிப் ஹவுஸ்’ மற்றும் பல்வேறு நீதி மன்றங்களுக்கு இ – மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக, 36 வழக்குகள் உள்ளன. இவற்றில், 34 வழக்குகளில் சரத் சுப்பிரமணியனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, கேரள மாநில போலீசார், அவரை கைது செய்து, அம்மாநிலத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
