கேரள ஆசிரியைகளுக்கு சர்வதேச போதை கும்பலுடன் தொடர்பு!: டாக்டர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் சிக்க வாய்ப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் போதைப்பொருள் கடத்தி விற்பனை செய்த வழக்கில், சமீபத்தில் கைதான ஆசிரியைகள் மூன்று பேருக்கு, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பிருப்பது அம்பலமாகியுள்ளது. இந்த விவகாரத்தில் டாக்டர்கள் உட்பட பலருக்கும் தொடர்பு இருப்பதும், விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரளாவில் முதல்வர் சதீசன் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இங்கு, பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களிடையே போதைப்பொருள் கலாசாரம் அதிகரித்ததை அடுத்து, ‘ஆப்பரேஷன் துாபான்’ என்ற நடவடிக்கையை மாநில அரசு தொடங்கியது.

கைது

சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனையில், ரிஸ்வான் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர், ஒரு மேற்காசிய நாட்டைச் சேர்ந்த ஒருவரின் மொபைல்போன் எண்ணை தொடர்பு கொண்டு போதைப் பொருள் கேட்டுள்ளார்.

அந்த நபர் அனுப்பிய ‘க்யூ.ஆர்., கோட்’ எனப்படும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கான குறியீட்டுக்கு பணம் அனுப்பி உள்ளார்.

அந்த ‘க்யூ.ஆர்., கோட்’ கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பெரம்பரா வட்டார வள மைய ஆசிரியை ஒருவரின் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், அவர் ‘சமக்ர சிக் ஷா கேரளா’ கல்வி திட்டத்தின் கீழ் பணியாற்றும் செறுகாடு பகுதியைச் சேர்ந்த ஆசிரியை காவ்யா என்பது தெரியவந்தது.

அவரும், அவரது தோழியான மருதோங்கரையைச் சேர்ந்த மற்றொரு ஆசிரியை கீர்த்தனாவும் போதைப்பொருள் கும்பலுடன் நேரடி தொடர்பில் இருந்தை போலீசார் கண்டறிந்தனர். இருவரையும் எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு விசாரணைக் குழுவினர் கைது செய்தனர்.

மேலும், இந்த வழக்கில் நீஷ்மா என்ற மற்றொரு ஆசிரியை நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

விற்பனை

இது குறித்து எஸ்.ஐ.டி., அதிகாரிகள் கூறியதாவது:

மேற்காசிய நாட்டைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல், அவற்றை கேரளாவில் விற்பனை செய்ய கீர்த்தனாவின் க்யூ.ஆர்., குறியீட்டை பயன்படுத்தியுள்ளனர்.

ஒவ்வொரு டிஜிட்டல் பரிவர்த்தனைக்கும் அவருக்கு 2,000 ரூபாய் தரப்பட்டுள்ளது. பணம் கிடைத்த உடன், போதைப்பொருள் இருக்கும் இடத்தை சம்பந்தப்பட்ட நபருக்கு ஜி.பி.எஸ்., எனப்படும் அமைவிடம் காட்டும் முறையிலும், புகைப்படமாகவும் அனுப்பி உள்ளார்.

இதில், அவருடன் காவ்யா மற்றும் நீஷ்மா ஆகிய ஆசிரியைகளும் இணைந்து செயல்பட்டு உள்ளனர். மேலும், அவர்களும் போதைப் பொருளை பயன்படுத்தி உள்ளனர்.

இவர்களுக்கு, மேற்காசிய நாட்டைச் சேர்ந்த சர்வதேச போதைப் பொருள் கும்பலுடன் நேரடி தொடர்பிருப்பது உறுதியாகி உள்ளது. ரகசியமாக போதைப்பொருட்களை நம் நாட்டுக்கு வரவழைத்து, இவர்கள் விற்பனை செய்து வந்துள்ளனர்.

விசாரணை

மாணவர்களுக்கு இவர்கள் போதைப்பொருட்களை விற்பனை செய்தது குறித்தும் கேரளாவுக்குள் போதைப்பொருளை கடத்தி வந்தது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

டாக்டர்களும் போதைப்பொருள் வாங்கி வினியோகித்ததாக தகவல் கிடைத்துள்ளது. அது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

ரூ.7.5 கோடி போதைப்பொருள் அழிப்பு ‘ஆப்பரேஷன் துாபான்’ நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கொச்சி நகரில் கடந்த ஓராண்டாக பறிமுதல் செய்யப்பட்ட 7.5 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் நேற்று அழிக்கப்பட்டன.

கண்காணிக்க உத்தரவு வட்டார வள மைய ஆசிரியைகள் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டதை அடுத்து, ‘அனைத்து வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளர்களும், தங்கள் மையங்களில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் செயல்பாடுகளை கவனிக்க வேண்டும், சந்தேகம் இருப்பின் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்’ என அதன் திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

Source link