கடந்த திமுக ஆட்சியின் போது நகராட்சி நிர்வாகத்துறையில் உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் நியமனத்திற்கு ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறி, அத்துறையின் அமைச்சராக இருந்த கே.என்.நேரு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றது.
இந்த சூழலில், திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என்.நேரு இல்லத்தில் 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் வழக்குத் தொடர்பாக சோதனை நடத்தப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீடு மற்றும் அவருடைய அலுவலகங்கள், நேருவின் உறவினர்களுடைய இல்லங்கள் மற்றும் அலுவலகங்கள் என 20க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
நகராட்சி நிர்வாக முறைகேடு தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் ஏற்கெனவே கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திய நிலையில், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில் கே.என்.நேரு மற்றும் அவருடைய உறவினர்கள் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. கே.என்.நேரு வீட்டில் சோதனை நடைபெற்று வரும் அதே வேளையில், அவரது ஆதரவாளர்களான திமுகவினர் ஏராளமானோர் அவரது வீடு முன்பு குவிந்துள்ளனர்.
