கொச்சி – – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு,- அடிமாலி ரோட்டில் போக்குவரத்து தடை

மூணாறு, அக. 21- –

கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு, அடிமாலி ரோட்டில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்று வழியில் வாகனங்கள் செல்ல இடுக்கி கலெக்டர் தினேசன்செருவாட் உத்தரவிட்டுள்ளார்.

கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு, கொச்சி இடையே 125 கி.மீ., தூரம் ரூ.1070 கோடியில் ரோடு அகலப்படுத்தும் பணி நடக்கிறது. அதற்கு மண் எடுக்கப்பட்டும், பாறைகள் உடைக்கப்பட்டும் பணிகள் நடக்கின்றன.

மூணாறு அருகே இரண்டாம் மைல் பகுதியில் மண் எடுக்கப்பட்டு கட்டுமானம் நடந்த பகுதியில் பாறைகள் சரிந்து ரோட்டில் விழுந்துள்ளன. மேலும் அப்பகுதியில் பாறைகள், மரங்கள் மிகவும் ஆபத்தாகவும் உள்ளன. அவற்றையும், ரோட்டில் விழுந்து கிடக்கும் பாறைகளையும் அகற்றி போக்குவரத்தை சீரமைக்க மூன்று நாட்கள் ஆகும் என நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பாதுகாப்பு கருதி மூணாறில் இருந்து இரண்டாம் மைல் வழியாக அடிமாலிக்கு போக்குவரத்தை முற்றிலுமாக தடை செய்து கலெக்டர் தினேசன்செருவாட் உத்தரவிட்டார்.

மாற்று ஏற்பாடு:

மூணாறில் இருந்து அடிமாலிக்கு செல்லும் வாகனங்கள் இரண்டாம் மைல் பகுதியில் இருந்து ஆனச்சால், இருட்டுகானம் வழியாக திருப்பி விடப்பட்டது. அதேபோல் மாங்குளத்திற்கு இருட்டு கானம் சென்று கல்லார் சந்திப்பு வழியாக செல்லவும் அறிவுறுத்தப்பட்டது.

கலெக்டர், ‘‘ரோடு சீரமைப்பு பணிகளை மூன்று நாட்களுக்குள் சீரமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பிறகு தொழில்நுட்ப நிபுணர் குழு ஆய்வு நடத்தி ஒப்புதல் அளித்ததும் போக்குவரத்து துவங்கும்,’’ என்றார்.

Source link