உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஒரு சீரீன் சோனி பிளேஸ்கூலில், 5 வயது சிறுவனுக்கு ஆசிரியை அளித்ததாகக் கூறப்படும் கொடூரமான தண்டனை நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாரணாசி அகதா பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பிளேஸ்கூலில், வழக்கறிஞர் ஒருவரின் 5 வயது மகன் நர்சரி வகுப்பில் படித்து வருகிறான். சம்பவத்தன்று, சிறுநீர் கழிக்க வேண்டும் என்று ஆசிரியையிடம் சிறுவன் அனுமதி கேட்டுள்ளான். ஆனால் அனுமதி வழங்கப்படாததால், சிறுவனால் சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாமல் பேண்ட்டிலேயே கழித்துவிட்டான்.
இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை, சிறுவனை தனி அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு கேஸ் ஸ்டவ்வில் கத்தியை அதிக வெப்பத்தில் காய்ச்சி, அந்த சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்துள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து யாரிடமும் கூறக்கூடாது என்றும், கூறினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் சிறுவனை மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டிற்கு திரும்பிய சிறுவன் கடுமையான வலியால் அழுதபடியே நடந்த சம்பவத்தை தனது தாயிடம் கூறியுள்ளான். இதனால் அதிர்ச்சியில் உறைந்த தாய், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் சம்பந்தப்பட்ட ஆசிரியையை தொடர்புகொள்ள பெற்றோர் முயன்றபோதும், அவர் அழைப்பை ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகத்தினரிடம் புகார் தெரிவிக்கச் சென்ற பெற்றோருக்கு உரிய ஒத்துழைப்பு கிடைக்காமல், மாறாக மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் லால்பூர்-பாண்டேபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சம்பவத்தில் தொடர்புடைய ஆசிரியை மற்றும் பள்ளி நிர்வாகத்தின் செயல்பாடு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளியில் பாதுகாப்பாக கல்வி கற்க வேண்டிய வயதில் உள்ள 5 வயது சிறுவனுக்கு நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடமும் பெற்றோர்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read: பழைய சார்ஜரை இன்னும் பயன்படுத்துகிறீர்களா? இதை முதலில் படியுங்கள்!
