கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்து வந்த சூழலில், தற்போது பருவமழை தொடங்கியுள்ளது. ஏற்கெனவே, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியும் உருவாகியுள்ளது.
இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. முன்னதாக, 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக, சங்கரன் கோயில், புளியங்குடி, குற்றாலம் மற்றும் சுரண்டை உள்ளிட்ட பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் (22-10-26) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் உத்தரவிட்டுள்ளார்.
