'கொண்டாட்டம் ஆரம்பம்'; ஜனநாயகன் பட டிக்கெட் முன்பதிவு துவங்கியது

சென்னை: முதல்வர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கான முன்பதிவு தமிழகத்தில் தொடங்கியது.

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படம் ஜனநாயகன் ஆகும். இத்திரைப்படம் அவர் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பே வெளிவந்திருக்க வேண்டியது. ஆனால், சென்சார் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக தடைபட்டது.

நடிகர் விஜய் தேர்தலில் போட்டியிட்டு, தமிழக முதல்வராகப் பதவியேற்ற பின்பு தற்போது வெளியாகிறது. அதாவது, ஜூலை 23ம் தேதி படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், பிற மாநிலங்களில் சிறப்புக் காட்சிக்கான முன்பதிவு துவங்கி, முடிவடைந்து விட்டது.

அண்டை மாநிலமான கர்நாடகாவின் பெங்களூருவில் காலை 6 மணி சிறப்பு காட்சிக்கான டிக்கெட் ரூ.1,800 வரை விற்பனையானது. இருப்பினும், முன்பதிவு துவங்கிய சில மணி நேரங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.

இந்த நிலையில், தமிழகத்தில் ஜனநாயகன் படத்துக்கான முன்பதிவு தொடங்கியது. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் ப்ரொடக்ஷ்ன் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், ‘கொண்டாட்டத்தை துவங்கலாம் நண்பா, நண்பீஸ்,’ எனக் குறிப்பிட்டுள்ளது.

முதல்வர் விஜய்யின் கடைசி படம் என்பதால், ஜனநாயகன் ரூ.1,000 கோடி வசூலை எட்டும் என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Source link