லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது, கடைசி ஒருநாள் போட்டி லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடக்க உள்ளது. இதில் சிறப்பாக செயல்பட்டு இந்தியா கோப்பை வெல்லக் காத்திருக்கிறது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டி முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1-1 என சமனில் உள்ளது. மூன்றாவது போட்டி இன்று, கிரிக்கெட்டின் தாயகம் என கூறப்படும் லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடக்க உள்ளது.
ரோகித் எதிர்பார்ப்பு
இந்திய அணிக்கு துவக்கத்தில் ‘சீனியர்’ வீரர் ரோகித் சர்மா 39, கேப்டன் சுப்மன் கில் ஜோடி துவக்கம் தருகிறது. இதில் ரோகித் முதல் இரு போட்டியில் 11, 26 ரன் மட்டும் எடுத்தார். கடந்த முறை தொடர்ந்து 9 பந்தில் ரன் எடுக்காமல் திணறி, அவுட்டானார். இன்று இவரது கடைசி போட்டியாக இருக்கலாம் என்ற நிலையில் ரன் சேர்க்க முயற்சிக்கலாம்.
கால் தசைப்பிடிப்பில் இருந்து மீண்ட சுப்மன் கில் (2 போட்டி, 111 ரன்), வழக்கமான ‘பார்மிற்கு’ திரும்பினால் நல்லது. மற்றொரு ‘சீனியர்’ வீரர் கோலி 37, தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். இரண்டாவது போட்டியில் 65 ரன் எடுத்த இவர், மீண்டும் கைகொடுக்கலாம்.
ஷ்ரேயஸ் ஐயர் (101) நம்பிக்கை தருகிறார். ஷிவம் துபே இரண்டு போட்டியில் விளையாடிய போதும், இன்னும் ரன் கணக்கை துவக்காதது அதிர்ச்சி தான். தவிர ‘மிடில் ஆர்டர்’ சரிவை தடுத்து நிறுத்தினால், இங்கிலாந்து அணிக்கு இமாலய ஸ்கோரை நிர்ணயிக்கலாம். காய்ச்சலில் இருந்து மீண்ட ராகுல் இன்று களமிறங்கலாம்.
அக்சர் நம்பிக்கை
வேகப்பந்து வீச்சில் பும்ரா (2 விக்.,) மீண்டும் அணிக்கு திரும்பியது, பவுலிங் பலத்தை அதிகரித்துள்ளது. இவருடன் குர்னுார் பிரார் (4), பிரசித் கிருஷ்ணா (3) ஜோடி நம்பிக்கை தருகிறது.
சுழலில் அக்சர் படேல், இதுவரை 5 விக்கெட் சாய்த்துள்ளார். வாஷிங்டன் சுந்தர் காயத்தால் வெளியேறிய நிலையில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படலாம். ஹர்ஷ் துபேவை சேர்க்கும் திட்டமும் உள்ளது.
ஜோ ரூட் பலம்
இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் முதுகெலும்பாக திகழ்கிறார் அனுபவ ஜோ ரூட். இதுவரை 2 போட்டியில் 175 ரன் எடுத்து, திறமை நிரூபித்துள்ளார். மற்றபடி துவக்க வீரர் டக்கெட், வில் ஜாக்ஸ் என யாரும் பொறுப்பாக செயல்படுவது இல்லை. கேப்டன் ஹாரி புரூக் (2 போட்டி, 17 ரன்), ‘சீனியர்’ பட்லர் (22) தடுமாறுவது பலவீனம்.
பந்துவீச்சை பொறுத்தவரையில் ஆர்ச்சர் (இதுவரை 4 விக்.,) தொடர்ந்து மிரட்டுகிறார். அட்கின்சன் (3), சாம் கர்ரானும் (2) சிக்கல் தர முயற்சிக்கலாம். சுழலில் அடில் ரஷித், ஒரு விக்கெட் கூட வீழ்த்தாதது அணிக்கு ஏமாற்றம்.
இன்று வெல்லும் அணி கோப்பை கொண்டு செல்லலாம் என்பதால், விறுவிறு மோதல் காத்திருக்கிறது.
