தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களை ஆகம விதிகளுக்கு உட்பட்டவை மற்றும் மரபு சார்ந்த வழிபாட்டு முறைகளைப் பின்பற்றுபவை என இரு பிரிவுகளாக வகைப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இந்த வகைப்பாட்டுப் பட்டியலைத் தயாரிக்கும் பணியில் ஆகம நிபுணர்களின் கருத்துகளையும் கட்டாயம் பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் பூஜைகள் மற்றும் சடங்குகள் ஆகம சாஸ்திரங்களின்படி நடக்கின்றனவா அல்லது காலங்காலமாகப் பின்பற்றப்படும் பாரம்பரியப் பழக்கவழக்கங்களின்படி நடக்கின்றனவா என்பதை ஆராய்ந்து வகைப்படுத்த ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு வெளியிட்ட முதற்கட்ட வரைவுப் பட்டியலில், சுமார் 7,461 கோயில்கள் ஆகம விதிகளையும், 27,150 கோயில்கள் பாரம்பரிய நடைமுறைகளையும் பின்பற்றி இயங்குவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வரைவுப் பட்டியல் குறித்துப் பொதுமக்களின் கருத்துகளும் ஆட்சேபனைகளும் கோரப்பட்டிருந்தன.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த பெரிய நம்பி நரசிம்ம கோபாலன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தொடுத்தார். அதில், கோயில்களை வகைப்படுத்த உருவாக்கப்பட்டுள்ள குழுவில் உரிய ஆகம வல்லுநர்கள் இடம்பெறவில்லை என்றும், வெறும் தினசரி பூஜைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஒரு கோயில் ஆகமத்தைச் சேர்ந்ததா இல்லையா எனத் தீர்மானிப்பது தவறானது என்றும் சுட்டிக்காட்டியிருந்தார். ஆகமம் என்பது வழிபாட்டு முறையை மட்டும் குறிப்பதல்ல; மாறாக ஆலயத்தின் வடிவமைப்பு, விக்கிரகப் பிரதிஷ்டை, கருவறை, கோபுரம், கொடிமரம், பிரகாரங்கள் எனப் பல்வேறு கட்டமைப்பு அம்சங்களை உள்ளடக்கிய ஒரு விரிவான சாஸ்திரமாகும். எனவே, ஆகம வல்லுநர்கள் மற்றும் வரலாற்று ஆசிரியர்கள் அடங்கிய குழுவைக் கொண்டு மீண்டும் மறுவகைப்பாடு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பி.முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் இது இறுதிப் பட்டியல் அல்ல என்றும், பொதுமக்களின் கருத்துகளைப் பெறுவதற்காக வெளியிடப்பட்ட வரைவுப் பட்டியல் மட்டுமே என்றும் விளக்கமளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கோயில்களின் வழிபாட்டுத் தன்மையை முடிவெடுப்பதில் ஆகமச் சான்றோர்களின் ஆலோசனையைப் பெறுவது மிக முக்கியமானது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், அவர்களின் கருத்துகளையும் பெற வேண்டும் எனத் தெளிவுபடுத்தினர்.
அரசு தரப்பிலும் ஆகம நிபுணர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டு, அதன் பிறகே இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதை அடுத்து, நீதிமன்றம் இந்த வழக்கை நிறைவு செய்து உத்தரவிட்டது.
