கோவிலுக்கு முடி காணிக்கை செலுத்த போறீங்களா? இந்த விஷயங்களை தெரிந்து கொள்ள மறக்காதீர்கள்

இந்துக்களின் வழிபாட்டு முறைகளில் நேர்த்திக்கடன் செலுத்துவது என்பது மிக முக்கியமான ஒரு சடங்காக பார்க்கப்படுகிறது. அவற்றில் அதிகமானவர்கள் முன் வைக்கும் நேர்த்திக்கடன், முடி காணிக்கை செலுத்துவது எனப்படும் மொட்டை அடிப்பது தான். இது பார்ப்பதற்கு எளிமையான நேர்த்திக்கடனாக தோன்றலாம். ஆனால் முடி காணிக்கை செலுத்துவதற்கு பின்னால் ஆழமான ஆன்மீக மற்றும் அறிவியல் காரணம் உள்ளது.

கோவில்களில் முடி காணிக்கை செய்வதன் ஆன்மீக காரணங்கள்:

1. அகந்தையை (தலைக்கனத்தை) அழித்தல் :

மனிதனின் அழகிற்கும், ஈர்ப்பிற்கும் அவனது தலைமுடி முக்கியப் பங்கு வகிக்கிறது. அழகின் அடையாளமாக கருதப்படும் முடியை நீக்குவதன் மூலம், ஒருவரது அகந்தை, தலைக்கனம் மற்றும் ஆணவம் ஆகியவை அழிகிறது. இறைவனின் முன்னிலையில் அனைவரும் சமம் என்பதையும், தன்னிடம் உள்ள “நான்”, “எனது” என்ற அகப்பற்றை கைவிடுவதையும் இது குறிக்கிறது.

2. நேர்த்திக்கடன் செலுத்துதல் :

வாழ்வில் பெரிய துன்பங்கள் நீங்கினாலோ அல்லது ஒரு வேண்டுதல் நிறைவேறினாலோ, இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக முடியை காணிக்கையாக்குகிறார்கள். “உன்னால் எனக்குக் கிடைத்த இந்த வாழ்க்கையில், என் அழகை உனக்கே அர்ப்பணிக்கிறேன்” என்ற நன்றியுணர்வு இதில் அடங்கியுள்ளது.

3. சரணாகதி தத்துவம் :

ஒரு மனிதனின் உடலில் மிக உயர்ந்த பாகம் தலைமுடி ஆகும். அந்த உயர்ந்த பாகத்தை இறைவனின் பாதத்தில் சமர்ப்பிப்பது என்பது, முழுமையான சரணாகதியை (இறைவனிடம் தன்னை ஒப்படைப்பது) குறிக்கிறது.

4. மறுபிறவி மற்றும் தூய்மை :

ஒரு குழந்தை பிறக்கும்போது தாயின் வயிற்றில் இருந்த அசுத்தங்களை நீக்க முதல் மொட்டை அடிக்கப்படுகிறது. அதே போல், பெரியவர்கள் மொட்டை அடிக்கும் போது, தங்கள் பழைய பாவங்கள், கெட்ட எண்ணங்கள் மற்றும் எதிர்மறை ஆற்றல்களை நீக்கி, ஆன்மீக ரீதியாக ஒரு புதிய மனிதனாக (மறுபிறவி) மாறுவதை இது குறிக்கிறது.

அறிவியல் ரீதியான காரணம்:

கோவில்கள் பொதுவாக அதிக நேர்மறை ஆற்றல் நிறைந்த இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும். தலையில் முடி இல்லாத போது, அந்த புனிதமான காந்த மற்றும் ஆன்மீக அலைகளை நமது உச்சந்தலை (சகஸ்ரார சக்கரம்) நேரடியாகவும் எளிதாகவும் ஈர்த்துக் கொள்ள முடிகிறது. சகஸ்ரார சக்கரம் என்பது மனித உடலில் உள்ள ஏழு முக்கிய சக்கரங்களில் ஏழாவது மற்றும் இறுதி சக்கரமாகும். இது தலைக்கு மேல் உச்சந்தலையில் அமைந்துள்ளது. ஆன்மீக ரீதியில் இது மிக உயர்ந்த நிலையை குறிக்கிறது. இந்த சக்கரம் முழுமையாக மலரும் போது, ஒரு நபர் தனது தனிப்பட்ட ஆன்மாவை பிரபஞ்ச சக்தியோடு (இறைவனோடு) இணைந்திருப்பதை உணர்கிறார்.உலக பந்தங்கள் மற்றும் மாயைகளில் இருந்து விடுபட்டு, பிறவிப் பெருங்கடலைத் தாண்டும் முக்தி அல்லது மோட்ச நிலையை அடைய இந்த சக்கரத்தின் விழிப்புணர்வு வழி வகுக்கிறது.

முடி காணிக்கை செலுத்துவதற்கு முன் கவனிக்க வேண்டியவை:

1. முடி காணிக்கை செலுத்தும் நாள் – நம்மில் பெரும்பாலானவர்கள் கோவிலுக்கு சென்று முடி காணிக்கை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதற்கு விடுமுறை நாளா அல்லது நமக்கு வசதியான நாளாக இருக்கிறது என்று மட்டும் தான் பார்ப்பது உண்டு. ஆனால் சாஸ்திர முறைகளின் படி, முடி காணிக்கை செலுத்துவதற்கு கிழமை, திதி, நட்சத்திரம், நல்ல நேரம் ஆகியவற்றை பார்த்து, பிறகு முடி காணிக்கை செலுத்த வேண்டும் என சொல்லப்படுகிறது.
2. முடி காணிக்கை செலுத்த ஏற்ற கிழமைகள் – திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் முடி காணிக்கை செலுத்தலாம். ஆனால் செவ்வாய், சனி, ஞாயிறு மூன்று கிழமைகளிலும் முடி காணிக்கை செலுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

3. முடி காணிக்கை செலுத்த ஏற்ற நேரம் – கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வதற்கும், முடி காணிக்கை செலுத்துவதற்கும் காலை நேரமே சிறந்தது.

4. கோவில் விதி முக்கியம் – கோவிலுக்கு சென்று முடி காணிக்கை கொடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுவது என்றால் அந்த கோவிலின் வழக்கம் மிக மிக முக்கியம். காரணம், அனைத்து கோவில்களின் விதிகளும் ஒரே மாதிரியாக இருப்பது கிடையாது. இது கோவிலுக்கு கோவில் மாறுபடும். அதனால் நாம் எந்த கோவிலுக்கு சென்று முடி காணிக்கை செலுத்த போகிறோமோ அந்த கோவிலில் முடி காணிக்கை செலுத்துவதற்கான விதிமுறை என்ன என்பதை முன்கூடியே தெரிந்து கொண்டு, நேர்த்திக்கடனை நிறைவேற்ற வேண்டும்.

5. கவனிக்க வேண்டிய 3 விஷயங்கள் – சாஸ்திரம், கோவில் சம்பிரதாயம் மற்றும் பரம்பரை வழக்கம் ஆகிய மூன்று விஷயங்களையும் தெரிந்து கொண்டு, அந்த முறைகளை பின்பற்றி முடி காணிக்கை அளிக்க வேண்டியது அவசியம் ஆகும்.

Source link